×

பெல் மருத்துவமனையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் 3வது நாளாக தர்ணா போராட்டம்

 

திருவெறும்பூர், ஜூலை 18: திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் வேலையில் பணியமர்த்த கோரி நேற்று 3வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என பெல் குடியிருப்பு வளாகத்தில் பெல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள், லேப் டெக்னீசியன்கள் உள்பட பல்வேறு பணிகளில் 160 பேர் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்கவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்புபேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். இதில் 2 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 16 ஒப்பந்த பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்ககோரி கடந்த 15ம் தேதி பெல் வளாகத்தில் உள்ள திருவள்ளுர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (17ம் தேதி) மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனது தந்தையுடன் வந்த பெண் குழந்தை ஒன்று ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தி எங்க அப்பாவிற்கு வேலை கொடு, எங்க அம்மாவிற்கு வேலை கொடு என்று கோஷம் போட்டது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது இது சம்மந்தமாக நாளை (இன்று) தாலுக்கா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக போலீசார் கூறியதாக தெரிவித்தனர்.

The post பெல் மருத்துவமனையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் 3வது நாளாக தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Bell ,Hospital ,Thiruverumpur ,Bell Hospital ,
× RELATED திருச்சி பெல் நிறுவன ஓய்வு பெற்ற...