×

கரூர் மாவட்டத்தில் ஆடி 1 அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

 

கரூர், ஜூலை 18: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடி 1ம் தேதி முன்னிட்டு தேங்காய் சுடும் நிகழ்வு நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. அதேபோல் கரூர் மாநகரில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் காலை முதல் குவிந்து சுவாமியை தரிசனம் செய்தனர். காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். இதற்கு பின் அனைவரும் கரூர் ஈஸ்வரன் கோயில், மாரியம்மன் கோயில், வெங்கட்ரமண சுவாமி கோயில், வெண்ணைய்மலை முருகன் கோயில், தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை போன்ற பகுதிகளில் காவிரி கரையோரம் நேற்று காலை ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர். ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று, கடலோரம், ஆற்றோர பகுதிகளுக்கு சென்று தங்களின் முன்னோர்களை நினைவுகூறும் விதமாகவும், அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளான நெரூர், தவிட்டுப்பாளையம், வாங்கல், மாயனூர், திருமுக்கூடலூர், குளித்தலை போன்ற காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்துச் சென்றனர். இதனால், கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் நேற்று அதிகளவு பொதுமக்கள் வந்து சென்றனர்.

The post கரூர் மாவட்டத்தில் ஆடி 1 அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.

Tags : Darpanam ,Adi 1 Amavasi ,Karur district ,Karur ,Adi 1 ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...