×

கட்டிடம் சரிந்ததால் நடவடிக்கை சிந்தாதிரிப்பேட்டை சாலை மூடல்: பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை: வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், நீர்வழித்தடங்களை தூர்வாரும் பணி, வடிகால்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சென்னையின் பல இடங்களில் பணிகள் வேகமெடுத்துள்ளன.அதன்படி, சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோயில் அருகே அருணாச்சலம் தெருவில் உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, அங்குள்ள கட்டிடத்தின் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி நள்ளிரவு இந்த பள்ளத்தை ஒட்டியுள்ள ஒரு கட்டிடத்தில் உள்ள 3 கடைகளின் முன்புறம் இடிந்து சரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில், பொதுமக்கள் யாரும் கட்டிடத்தின் அருகே செல்லாமல் இருக்க தடுப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி, அவ்வழியே வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு, சாலை மூடப்பட்டுள்ளது.

The post கட்டிடம் சரிந்ததால் நடவடிக்கை சிந்தாதிரிப்பேட்டை சாலை மூடல்: பாதுகாப்பு பணியில் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Chindathiripet ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...