
தாம்பரம்: அண்ணாமலையை பாஜவினரே காமெடி பீசாக பார்க்கின்றனர், என டி.ஆர்.பாலு எம்பி பேசியுள்ளார். தாம்பரம் மாநகரம், பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு திமுக தலைவருமான டி.ஆர்.பாலு எம்பி, திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றி மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, தையல் மெஷின், இஸ்திரி பெட்டிகள், கேரம் போர்டுகள், பள்ளி மாணவர்களுக்கு பேக்குகள், பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்பி பேசியதாவது: பொது சிவில் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பலம் இருக்கிறது என்று கொண்டு வந்தால் நாட்டில் இருக்கின்ற ஒற்றுமை தன்மையும், சகிப்புத்தன்மையும், மதச்சார்பின்மையும் போகிவிடும். தம்பி அண்ணாமலை புதிது புதிதாக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
அவர், என்ன பேசுகிறார் என்பதை படிப்பதற்கு தனி டிக்ஷனரி தேவைப்படும். அரசியல் மேதைகள் வாழ்ந்த இந்த தமிழ்நாட்டில் ஆளுநர், பாஜ மாநில தலைவராக உள்ள 2 முன்னாள் போலீஸ்காரர்களை அமர வைத்து நாட்டை தவறுதலாக வழிநடத்தி வருகிறார்கள். அவர்கள் கட்சியிலேயே மூத்த தலைவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் தெரியாத அரசியல் அண்ணாமலைக்கு தெரிந்து விட்டதா என்ன. பாஜவை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளிடம், இதுபற்றி கேட்டதற்கு, அவர்கள் சிரிக்கிறார்கள், சிரிப்பதை தவிர அவர்களால் வேறு எதுவும் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அவரை ஒரு காமெடி பீசாக பார்க்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் 5வது மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், திமுக நிர்வாகிகள் ஜா.ரவிக்குமார், வேல்மணி, கருணாகரன், ஆர்.எஸ்.சங்கர், மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், ஜோதி குமார், சிட்லபாக்கம் சுரேஷ், கொடி தாமோதரன், சசிகலா கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அண்ணாமலையை பாஜவினரே காமெடி பீசாக பார்க்கின்றனர்: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு appeared first on Dinakaran.