×

எர்ணாகுளம் அருகே போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து கல்லூரி மாணவர்களை மீட்ட 2 காங். எம்எல்ஏக்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் போலீசார் கைது செய்த மாணவர்களை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து லாக்கப்பை திறந்து அழைத்துச் சென்ற 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி மாணவர்களிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மாணவர் சங்கத்தை சேர்ந்த ராஜீவ், டிஜோன் ஆகிய 2 மாணவர்களை போலீசார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து கொண்டு சென்றனர். இந்நிலையில் மாணவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததைக் கண்டித்தும், மாணவர்களை கை விலங்கு அணிவித்து போலீசார் தாக்கியதாகவும் கூறி காங்கிரசார் காலடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆலுவா ஏஎஸ்பி ஜுவனப்படி மகேஷ் அங்கு விரைந்து சென்று காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தவறு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களான ரோஜி எம். ஜான் மற்றும் சனீஷ்குமார் ஜோசப் உள்பட காங்கிரசார் காலடி போலீஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்த மாணவர்களை விடுவிக்குமாறு கூறினர். ஆனால் அவர்களை விட போலீசார் மறுத்தனர். இதையடுத்து எம்எல்ஏக்கள் இருவரும் லாக்கப்பை திறந்து மாணவர்கள் ராஜீவ் மற்றும் டிஜோனை போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் லாக்கப்பில் இருந்து மாணவர்களை அழைத்துச் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களான ரோஜி எம். ஜான் மற்றும் சனீஷ்குமார் ஜோசப் ஆகியோர் மீது காலடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post எர்ணாகுளம் அருகே போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து கல்லூரி மாணவர்களை மீட்ட 2 காங். எம்எல்ஏக்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ernakulam ,Thiruvananthapuram ,Congress ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது