×

முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

ஈரோடு: மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218வது நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு நேற்று காலை ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு விரைவில் மணி மண்டபம் அமைக்கப்படும். சில இடங்களில் மதுபானத்திற்கு கூடுதல் விலை வைத்து விற்ற ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு மது விற்பனை செய்யப்படும் என்று நான் கூறவில்லை. விற்பனை நேரம் மாற்றப்படாது. தவறான இடங்களில் மது வாங்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் சொன்னோம். புதிதாக இளைஞர்கள் மது வாங்க வந்தால் அது குறித்து தகவலை அளிக்க விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த இளைஞர்களுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து கவுன்சலிங் தர நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய டெட்ரா பேக் வந்தால் குழந்தைகள் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற ஆபத்து உள்ளதால் டெட்ரா பேக் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பிறகே முடிவு செய்யப்படும். தமிழகத்தில் முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

The post முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,S. Muthuswamy ,Muthusamy ,S.Muthusamy ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...