×

மாமூல் பிரிப்பதில் மோதல் பாஜ நிர்வாகிகள் மீது வழக்கு

உடுமலை: உடுமலையில் கனிம வள கொள்ளையர்களிடம் இருந்த வசூலித்த மாமூல் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜ நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் அருண்பிரசாத் (36). பாஜ திருப்பூர் தெற்கு மாவட்ட ஐடி விங் செயலாளர். இவர் சம்பவத்தன்று நண்பருடன் உடுமலை மீனாட்சி நகர் அருகே வந்துள்ளார். அப்போது உடுமலை ஒன்றியக்குழு 4வது வார்டு கவுன்சிலரான பாஜவை சேர்ந்த நாகமாணிக்கம் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் இரும்பு பைப்பால் அருண்பிரசாத்தை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த உடுமலை போலீசார் மருத்துவமனை சென்று அருண்பிரசாத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்தும் லாரி உரிமையாளர்களிடம் இருந்து பாஜவினருக்கு கொடுக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் மாமூலை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அருண்பிரசாத் உடுமலை போலீசில் அளித்த புகாரின் பேரில் நாகமாணிக்கும் தரப்பினர் மீது தகாத வார்த்தை பேசி ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவாகியுள்ளது.

இதேபோல நாகமாணிக்கம் வீட்டில் அவர் இல்லாதபோது வீட்டின் கண்ணாடியை உடைத்து, பொருட்களை சூறையாடிய அருண்பிரசாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகமாணிக்கம் தரப்பினர் உடுமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். நாகமாணிக்கத்தின் அண்ணன் மனைவி செல்வநாயகி (64) அளித்த புகாரில், அருண்பிரசாத் வீட்டின் கண்ணாடியை உடைத்து, கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதன்பேரில் அருண்பிரசாத் தரப்பினர் மீது தகாத வார்த்தையால் பேசுதல், வீட்டை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post மாமூல் பிரிப்பதில் மோதல் பாஜ நிர்வாகிகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Mamul ,Udumalai ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...