×

மகளிர் டென்னிஸ் தரவரிசை முதல் முறையாக டாப் 10ல் மார்கெட்டா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ருசோவா, முதல் முறையாக ஒற்றையர் தரவரிசை டாப் 10ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். பரபரப்பான பைனலில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபரை வீழ்த்தி விம்பிள்டன் கோப்பையை முத்தமிட்ட மார்கெட்டா, முழுமையாக 2000 புள்ளிகளை தட்டிச் சென்றார். இதனால் தரவரிசையில் 32 இடங்கள் முன்னேறிய அவர் 10வது இடத்தை பிடித்துள்ளார். மார்க்கெட்டா முதல் முறையாக ‘டாப் 10’ல் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 7வது ரேங்க் வரை எந்த மாற்றமும் இல்லை. விம்பிள்டன் 4வது சுற்று வரை முன்னேறிய நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் 425 புள்ளிகள் பெற்று 9315 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். குவித்தோவா ஒரு இடம் முன்னேறி 8வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறிய மரியா சாக்கரி ஒரு இடம் பின்தங்கி 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வீரர்களுக்கான ஏடிபி தரவரிசையில் முதல் 13 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. விம்பிள்டன் போட்டிக்கு முன்பு முதல் 2 இடங்களில் இருந்த அல்கராஸ், ஜோகோவிச் இடையிலான புள்ளி வித்தியாசம் வெறும் 80ஆக இருந்தது. தற்போது அது 880ஆக அதிகரித்துள்ளது. போபண்ணா முன்னேற்றம்: விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்ற இந்திய வீரர் ரோகன் போபண்ணா (43), கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்றுடன் வெளியேறினாலும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிவரை முன்னேறி இருந்தார். இதனால் 630 புள்ளிகள் பெற்று 5 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். 2013ல் அவர் அதிகபட்சமாக 3வது இடத்தை பிடித்திருந்தார். போபண்ணாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் (35) 630 புள்ளிகள் பெற்றதால் 6 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

The post மகளிர் டென்னிஸ் தரவரிசை முதல் முறையாக டாப் 10ல் மார்கெட்டா appeared first on Dinakaran.

Tags : Marquette ,London ,Czech ,Republic ,Marketa Vondrusova ,Wimbledon ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை