×

கடந்த 2017ம் வருடம் போல் முக்கடல் அணையில் மைனசில் தண்ணீர் இருப்பு: 16 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் முக்கடல் அணையில் இருந்து கொண்டுவரப்பட்டு கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் மைனஸ் கீழ் தண்ணீர் உள்ளபோது தண்ணீர் எடுக்கமுடியாத நிலை இருந்து வருகிறது. தற்போது மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து மக்கள் தொகை அதிகரிப்பால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு புத்தன்அணை குடிநீர் திட்டப்பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் இரு மாதங்களில் முடிக்கப்பட்டு மாநகர பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி மேயர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மாநகர பகுதியில் ஆட்கள் அதிகரித்துள்ளதால், கோடைகாலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் சானல் திறந்துவிட்டு மாநகராட்சி மக்கள் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை குமரி மாவட்டத்தை ஏமாற்றியது. இதனால் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையில் தண்ணீர் சரசர வென குறைந்தது. தற்போது மைனஸ் 14.30 அடியில் தண்ணீர் உள்ளதால், முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கமுடியாத நிலை இருந்து வருகிறது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து அனந்தனார்சானல் வழியாக வரும் தண்ணீரை பம்பிங் செய்யப்பட்டு மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாகர்கோவில் மாநராட்சியில் குடிநீர் பிரச்சனை கடந்த 2017ம் ஆண்டு இருந்தது. அதே நிலை தற்போது இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 9 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் நீர் மட்டம் குறைந்தவுடன், மாநகராட்சி மேயர் மகேஷ், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன்அடிப்படையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் மழை பெய்யாதால், பேச்சிப்பாறை அணை தண்ணீரை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முப்பு கால்வாய் தூர்வாரும் பணி நடந்ததால், அணையில் தண்ணீர் அடைக்கப்பட்டது. இதன்காரணமாக 9 நாட்களுக்கு ஒரு முறைவிநியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது 16 நாட்கள் ஆகிறது. இன்னும் ஒரு வாரத்தில் 9 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு முக்கடல் அணையில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு வருகிறது. தினமும் 210 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதனை தவிர மாநகர பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இதே நாளில் பிளஸ் 7 அடியில் முக்கடல் அணை தண்ணீர் இருந்தது. மேலும் மழை பெய்ததால், எந்தவிதபாதிப்பும் இன்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. என்றார்.

The post கடந்த 2017ம் வருடம் போல் முக்கடல் அணையில் மைனசில் தண்ணீர் இருப்பு: 16 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Tripod Dam ,Nagarko ,Krishnanko ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்