×

பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் அம்மன் கோயில்களில் ஆடி அமாவாசை வழிபாடு: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் அம்மன் கோயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அமாவாசை வழிபாடு நடந்து வருகிறது. இதில், இன்று ஆடி அமாவாசை என்பதால், பல்வேறு அம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோயில், கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயில், பயாஸ்கோப் வீதி சவுடம்மன் கோயில், மரப்பேட்டை வீதி பிளாக்மாரியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஊத்துக்காடு ரோடு பத்ரகாளியம்மன் கோயில், விண்ணளந்த காமாட்சியம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் இன்று ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும், ஆடி அமாவாசையையொட்டி, பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி வழியாக செல்லும் ஆழியாற்றங்கரையில் ஏராளமானோர் முன்னோருக்கு திதி கொடுத்தனர். இதனால், ஆற்றங்கரையோரம் பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்தும், படையலிட்டும் வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி, ஆடி அமாவாசையான இன்று பவானி ஆற்றில் குளித்து தங்களது முன்னோர்களுக்கு படையிலிட்டு, தர்ப்பணம் செய்து பொது மக்கள் வழிபட்டனர்.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஆற்றங்கரையில் முன்னோர்களை வழிபட்ட பின்பு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதில், மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் நந்தவனம் பகுதியில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் தங்களது குடும்பத்தினருடன் காத்திருந்து பொதுமக்கள் முன்னோர்களின் ஆசியினை பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நந்தவனத்தின் செயலாளர் சி.பி.எஸ். பொன்னுச்சாமி செய்திருந்தார்.

The post பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் அம்மன் கோயில்களில் ஆடி அமாவாசை வழிபாடு: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Aadi Amavasi ,Amman ,Pollachi, Mettupalayam ,Pollachi ,Adi Amavasai ,Mettupalayam, Pollachi ,Pollachi Nagar ,Adi Amavasi ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்