×

மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு வரையாடுகள் வருகை அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் கண்டு வியப்பு

மூணாறு: இனச்சேர்க்கை காலம் துவங்கியுள்ளதால் மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு வரையாடுகளின் வருகை அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் வரையாடுகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். கேரள மாநிலம், மூணாறை எத்தனை வார்த்தைகளால் வர்ணித்தாலும் `தென்னகத்தின் காஷ்மீர்’ என வர்ணிப்பதற்கு இணையாக மற்றவை இருக்காது. அந்த அளவுக்கு காஷ்மீரைப் போன்ற இயற்கைசூழ் நகரமாகத் திகழ்கிறது.

மூணாறில் அதிகமாக கண்களைக் கொள்ளைகொள்வது தேயிலைத் தோட்டங்கள்தான். அதனிடையே வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகள் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். அதுபோல், அருகி வரும் இனமான வரையாடுகளை பார்க்க வேண்டுமானால், மூணாறுக்கு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு செல்ல வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியான ராஜமலையில் இந்த பூங்கா ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. பூங்காவில் உள்ள வரையாடுகளை காண வரும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றனர். இதற்காகவே அனுமதிக்கப்பட்டுள்ள வாகனத்தில் மட்டும் தான் சுற்றுலாப் பயணிகள் சென்று வர வேண்டும். இந்தப் பூங்கா பல்வேறு அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடம் ஆகும்.

சில்லென்று வீசும் காற்று, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் மலைகள், பச்சை புல்வெளிகள், மூடுபனியால் போர்த்தப்பட்டிருக்கும் தேயிலைத் தோட்டங்களின் கண்கவர் காட்சி போன்றவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவருகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் இந்த பூங்கவை சுற்றி காண்பதற்கு வனத்துறையின் சார்பில் சிறப்பு வாகன வசதி செய்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும், பருவமழை துவங்கிய சில நாட்களிலேயே ராஜமலை பகுதியில் வரையாடுகள் இனச்சேர்க்கைக்கு வந்து சேரும்.

தற்போது இப்பகுதியில் மேகமூட்டமும், சாரல் மழையும் இருப்பதால் ஆண் வரையாடுகள் இனச்சேர்க்கைக்கு வரதொடங்கியுள்ளன. இந்த ஆடுகளின் வயிறு, கால்கள், முழங்கால்கள் மற்றும் முகம் ஆகியவை வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த வருடம் பருவமழை தாமதமானதால், தற்போது ஆண் வரையாடுகள் ஒவ்வொன்றாக வர துவங்கியுள்ளன. இரவிகுளம் தேசிய பூங்காவில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் வரையாடுகளை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

The post மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு வரையாடுகள் வருகை அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் கண்டு வியப்பு appeared first on Dinakaran.

Tags : Munnar Iravikulam National Park ,Munnar ,
× RELATED மூணாறு அருகே பரிதாபம்; செந்நாய்கள் தாக்கி 40 ஆடுகள் உயிரிழப்பு