×

இயற்கை விவசாயத்திற்கு என்றுமே மவுசுதான்!

நம்மாழ்வாரின் தொடர்ச்சியான இயக்கம், அவரைத்தொடர்ந்து சிலரின் இடைவிடாத முயற்சி ஆகியவற்றால் இயற்கை வேளாண்மை, மரபு வேளாண்மை குறித்து இன்று தமிழகத்தில் நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல ஊர்களின் இப்போது இயற்கை விவசாயம் செய்யப்படுவதோடு, உழவர்களே இணைந்து இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களைக் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அதேபோல இயற்கை விளைபொருட்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் உணவுத்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் மரபு வழியில் பயிரிடப்பட்ட பல வகையிலான வேளாண் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 வருடங்களுக்கு மேலாக இயற்கை வேளாண்மை செய்து வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். தற்போது 23 விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பயிரிடும் இயற்கை வேளாண் பொருட்களான நெல், மணிலா, மஞ்சள், பயறு வகைகள், எள், கரும்பு மற்றும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நேரடியாக விற்பனை செய்வதற்கும், மதிப்பு கூட்டி விற்பதற்கும் சரியான வழித்தடம் இல்லாததால் இயற்கை வேளாண்மை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சியில் இயற்கை விவசாயிகள் பயிரிட்ட இயற்கை வேளாண் பொருட்களை வைத்து உணவு சமைத்து பரிமாறப்பட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தப்பட்டது.

இந்தத் திருவிழாவில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் இயற்கையான விளைபொருட்களில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய அரங்கம் அமைக்கப்பட்டது. பல்வேறு விதைகள், தற்சார்பு உற்பத்தி ஆகியவையும் அரங்கில் இடம்பெற்றன. இதன்மூலம் இயற்கை சார்ந்த பொருட்களை தேடல் உள்ளவர்களுக்கு கிடைக்க இந்த மாவட்டத்திலேயே வழிவகை செய்யப்பட்டது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பயிர்களைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவுகள் உணவுத்திருவிழாவில் அதிக கவனம் பெற்றன. கருப்பு கவுனி பாயசம், சீரக சம்பா பலா பிரியாணி, ரத்தசாலி சாம்பார் சாதம், தூயமல்லி மாங்காய் சாதம், தங்க சம்பா கருவேப்பிலை புதினா சாதம் போன்றவை பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவற்றை ருசித்துப் பார்த்த பார்வையாளர்கள் இந்த பொருட்களில் இவ்வளவு அயிட்டங்கள் செய்யலாமா? என ஆச்சர்யத்தில் விழுந்தனர்.

விழாவிற்கு வந்திருந்த தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பார்வையாளர்கள், இதுபோன்ற விழாவினை ஆண்டுக்கு இரு முறையாவது நடத்த வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த விழாவில் சுமார் 1500க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இதுவே இயற்கை விவசாயத்திற்கும், பாரம்பரிய உணவுகளுக்கும் கிடைத்த வெற்றி என்கிறார்கள் இயற்கை விவசாயிகள்.

The post இயற்கை விவசாயத்திற்கு என்றுமே மவுசுதான்! appeared first on Dinakaran.

Tags : Nammalwar ,Tamil Nadu ,
× RELATED வில்லிபுத்தூரில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா