×

அடியவர்கள் ஆடிப்பாடி மகிழும் ஆடி மாதத்தின் அற்புத சிறப்புகள்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

ஆடி 7 (23-7-2023) புதன், சிம்ம ராசிக்கு மாறுதல்
ஆடி 13 (29-7-2023) சுக்கிரன் வக்கிர கதி ஆரம்பம்
ஆடி 25 (10-8-2023) புதன் வக்கிர கதி ஆரம்பம்

உலகின் உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு ஆதார சக்தியாக விளங்கும் ஆதவன், அவரது பகை வீடான மிதுன ராசியை விட்டு, மற்றொரு பகை ராசியானதும், சந்திரனின் ஆட்சி வீடாகத் திகழ்வதுமான கடக ராசிக்குப் பிரவேசித்து, வலம் வரும் காலத்தையே “ஆடி” மாதம் எனப் பூஜித்து வருகிறோம்.

மற்ற எந்த மாதத்திற்கும் இல்லாத ஓர் தனித் தெய்வீகப் பெருமை பெற்றது, இந்த ஆடி மாதம். அதன் தனிப் பெருமைதான் என்ன…?

அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஈன்றெடுத்த அன்பு அன்னையாகப் பாசம் எனும் பாலூட்டி, வளர்த்துப் பராமரித்து அருளும் அன்னை பராசக்தி, திருக்கையிலைப் பிரானான சிவபெருமானை பதியாக அடைவதற்காக, மிகக் கடினமான உபவாசம் இருந்து, ஆடித் தபசு எனப் பக்தர்கள் இன்றும் போற்றிக் கொண்டாடி, பூஜித்துவரும் விரதத்தை அனுஷ்டித்த பரம புண்ணிய மாதம் இது.

கடைப்பிடிப்பதற்கு மிகவும் கடினமான இந்த உபவாச விரதத்தை அம்பிகை அனுஷ்டிக்கும்போதுதான், அவளது குழந்தைகளான ஏராளமான பக்தர்கள் கூடை, கூடையாக பல வித வாசனை புஷ்பங்களைக் கொணர்ந்து, அம்பிகையை புஷ்பக் குவியல்களால் மஞ்சனமாட்டி மகிழ்கின்றனர். “பூச் சொரிதல்” எனும் அதியற்புத இவ்விழாவின் அழகையும், பக்தியையும் காண ஆயிரம் கண்கள் போதாது.

ஒவ்வொரு திருத்தலத்திலும், சிற்றூர்கள், சிறு கிராமங்களில்கூட, அம்மன் சந்நதிகளில் ஆடி மாதத்தில், அம்மனுக்காக “கரகம்” எடுத்து, விசேஷமாக விழா எடுத்துக் கொண்டாடுவது அனைவரும் அறிந்ததே! தமிழகத்தின் புண்ணிய திருத்தலமான சங்கரன் கோயிலில், கோமதி அம்மன் ஆடித் தபசு காட்சியைக் காண பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அன்று அன்னையின் திருக் கண்களிலிருந்து வெள்ளமெனப் பெருகிவரும் அருட்கருணையைக் காணும்போது மெய்சிலிர்க்கும். நம்மையும் அறியாமல் உடலிலும், உள்ளத்திலும் ஆனந்தம் பெருகி, கண்களில் ஆனந்தப் பெருநீர் சுரக்கும்! அனுபவத்தில் இதை உணர முடியும்.

இந்த ஆண்டு, ஆடி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த அரிய தரிசன விழா கொண்டாடப்படுகிறது. வசதியுள்ள அன்பர்கள் தவறாமல் சென்று தரிசிப்பது பல பிறவிகளிலும் கிடைத்தற்கரிய புண்ணிய, புனித தரிசனமாகும். இந்த ஆண்டு, ஆடி மாதத்தில், சூரியன் வலம் வரும் கடக ராசி, மனோகாரகரும், மாத்ருகாரகருமான சந்திரனின் ராசியாகும். சூரியன் சரீர காரகராவார்.

உடலுக்கு உரியவர் சூரியன். மனத்திற்கு உரியவர் சந்திரன். மனிதப் பிறவியின் அைனைத்து ஆற்றல்களும், செயல்களும், “உடல்”, “மனம்” ஆகிய இரண்டினுள்ளே அடங்கியவையே ஆகும். உடலைக் கட்டுப்படுத்தும் சூரியன், மனத்தைக் கட்டுப்படுத்தும் சந்திரனின் ராசியில் சஞ்சரிக்கும்போது, மனிதனின் ஆற்றல்களிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தும் என “பாஸ்கர ஸம்ஹிதை” எனும் புராதன நூலிலும் “அஷ்டாங்க ஹ்ருதயம்” எனும் புராதன நூலிலும், “சரகர் ஸம்ஹிதை” ஆகிய பிரசித்திப்பெற்ற ஆயுர்வேத நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. நவக்கிரகங்களின் சஞ்சார நிலைகளுக்கும், நமது உடல் நலனுக்கும் உள்ள சம்பந்தம் இதனால் விளங்குகிறது அல்லவா?

ஆடி மாதத்திற்கு மற்றோர் பெருமையும் உண்டு! மகிஷாசுரன் எனும் கொடிய அரக்கன் கடும் தவம் இயற்றி, ஆண்கள், விலங்குகள், பறவைகள், தண்ணீர், நெருப்பு ஆகியவற்றால், தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரனைப் பெற்றான். பெண்களுக்குத் தன்னைக் கொல்லும் வலிமை கிடையாது என்பது அவனது எண்ணம். அதனால், பெண்களாலும் தனக்கு மரணம் நேரிடக் கூடாது என அவன், ஈஸ்வரனிடம் வரன் கேட்கவில்லை.

தேவர்களும், முனிவர்களும் அக்கொடியவனை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி அருள் புரியும்படி, சிவபெருமானைச் சரணடைந்து, வேண்டினர். அதன் விளைவாக, அம்பிகை பராசக்தி, ஈசனை வணங்கி, அவரது அனுமதியும் பெற்று, ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை தினத்தில் அன்னை சாமுண்டி தேவியாக, தனது ஒவ்வொரு ஹஸ்தங்களிலும் (கைகளிலும்) கத்தி, கதை, வாள், சக்கரம், திரிசூலம் போன்ற திவ்ய ஆயுதங்களைத் தரித்த 18 திருக்கரங்களுடன் காட்சியளித்தாள்.மார்க்கண்ேடய மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட பெருமைகளைக் கொண்ட அன்னை சாமுண்டீஸ்வரியாக, ஈரேழு பதினான்கு உலகினராலும் வணங்கப்பட்டாள்.

மகத்தான சக்திவாய்ந்த அன்னை சாமுண்டீஸ்வரி கடும் போரிட்டு, மகிஷாசுரனை வதம் செய்து மக்களைக் காத்தருள் புரிந்தாள். அன்றிலிருந்து “மகிஷாசுரமர்த்தினி” எனும் திருநாமத்துடன் பூஜிக்கப்படுகிறாள். மக்களின் பக்தியை பரம காருண்யத்துடன் பெற்றுக்கொண்டு, தற்போதைய கர்நாடகாவின் மைசூரில் சாமுண்டி மலையில் எழுந்தருளி, பக்தகோடிகளுக்கு, இன்றளவும் அருள்பாலித்தருள் புரிகின்றாள், அகிலத்தை ஆளும், அன்னை சாமுண்டீஸ்வரி!

இம்மாதத்தின் மற்ற புண்ணிய, விசேஷ தினங்கள்!

ஆடி1 முதல், ஆடி 5-ம் தேதிவரை: நாம் நமது அனைத்து புண்ணிய நதிகளான கங்கா, யமுனை, கோதாவரி, காவேரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரஸ்வதி, சிந்து, அலகநந்தா, மந்தாகினி, வேத்ரவதீ அனைவரையும் தேவியராகவே பூஜித்து வருகிறோம். இவர்கள் அனைவரும் ஆடி மாதத்தின் முதல் மூன்று நாட்கள் “ரஜஸ்வலை” நிலையை அடைவதாகவும், ஆதலால் ஆடி மாதத்தின் முதல் 5 நாட்கள் நதிகளில் நீராடக் கூடாது எனவும் நம் தர்ம நூல்கள் கூறுகின்றன.

ஆடி 6 (22-7-2023) திரு ஆடிப் பூரம். பரமபக்தையும், பக்தியினாலேயே அரங்கனைப் பதியாக அடைந்தவளுமான ஆண்டாள், ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த புண்ணிய தினம்.

ஆடி 18 (3-8-2023)18-ம் பெருக்கு. தமிழக மக்கள், தங்கள் புண்ணிய நதியான காவிரியை பூஜிக்கும் பரம பவித்ரமான தினம்.

ஆடி 24 (9-8-2023) ஆடிக் கிருத் திகை!! முருகப் பெருமானைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.

ஆடி 30 (15-8-2023 கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி இணையும் புண்ணிய தினம். சூரிய கிரகண புண்ணிய காலத்திற்குச் சமமானது. இன்று பித்ருக்களுக்கும், எம தர்மராஜருக்கும் தர்ப்பணம் செய்வது பாபங்கள் அகன்று, புண்ணிய பலன் கிட்டும்.

ஆடி 31 (16-8-2023) ஆடி அமாவாசை – பித்ருக்களைப் பூஜிக்க வேண்டிய புனித தினம். சமுத்திர ஸ்நானம், புண்ணிய நதிகளில் ஸ்நானம் பாபங்களைப் போக்கும்.

இத்தகைய தெய்வீகப் பெருமை வாய்ந்த இந்த ஆடி மாதத்தில் கிரக சஞ்சார நிலைகளினால் ஏற்படவுள்ள நன்மைகளையும், பிரச்னைகளையும் டிகிரி சுத்தமாக ஆராய்ந்து, எமது அன்பிற்கும், பாசத்திற்கும், மதிப்பிற்கும் உரிய “தினகரன்” வாசக அன்பர்களுக்கு அளிப்பதில் மன நிறைவு பெறுகிறோம். அவசியமான ராசிகளுக்கு மிகவும் எளிய, ஆயினும் சக்திவாய்ந்த பரிகாரங்களையும் புராதன, சூட்சும நூல்களிலிருந்து எடுத்துக் கூறியிருக்கிறோம். பலன் கைமேல் கிட்டும். உங்கள் அன்பிற்குரிய நண்பர்களுக்கும் கூறுங்கள். அனைவரும் பயனடைந்து, வாழ்க்கையில் வளமும், சகல நலன்களையும் பெற்று, மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வாழ வழிவகை செய்திடல் உங்களுக்கும் நலன் பயக்குமல்லவா? நன்றிகளுடன், வாழ்க வளமுடனும், உடல்நலமுடனும்!!

The post அடியவர்கள் ஆடிப்பாடி மகிழும் ஆடி மாதத்தின் அற்புத சிறப்புகள்! appeared first on Dinakaran.

Tags : Bhagavad Kainkarya ,Audi ,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...