×

தொப்பூர் அருகே முற்கால இரும்பு கால குடியிருப்பு கண்டுபிடிப்பு

தர்மபுரி: தொப்பூர் அருகே, முற்கால இரும்பு கால குடியிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ரயில்நிலையம் பின்புறம் வனகொண்ட பெருமாள் கோயில் பகுதியில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையில், மாணவர்கள் கிருபானந்தன், இளந்திரையன், விஜய் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு முற்கால இரும்புக்காலத்தில் சேர்ந்த குடியிருப்பு ஒன்றை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:
விவசாயி சித்தப்பன் என்பவர், இப்பகுதியில் கிடைத்த ஒரு கல் ஒன்றை அனுப்பி, அதைப்பற்றி தகவலை கேட்டார். அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கு ஏராளமான பானை ஓடுகள் சிதறி கிடந்தன. சுமார் இரண்டு, மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பானை ஓடுகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. முதுமக்கள் தாழி முதல் கருப்பு சிவப்பு, பானை ஓடுகள் வரை கிடைத்தது. இங்கு கல்வட்டங்களும், குத்துக்கற்களும் காணப்படுவதை வைத்து, இப்பகுதி இரும்பு காலத்தை சேர்ந்தது என்று குறிப்பிடலாம். பெருங்கற்கால காலத்தின் இறுதி பகுதியில், இரும்பு கற்காலம் தொடங்குகிறது.

முற்கால இரும்பு காலமாக கொண்டு, பொது ஆண்டு ஏழாம் நூற்றாண்டு வரை, இதனுடைய காலத்தை கணக்கிடலாம் என தொல்லியல் அலுவலர் பரந்தாமன் கூறுகிறார். இங்கு கிடைத்துள்ள அரவை கல் போன்ற ஒரு கல், முக்கால் அடிக்கு முக்கால் அடி அகலத்தில் காணப்படுகிறது. அடிப்பகுதி குடுவை போன்றும், மேலே ஒரு கூம்பு போன்றும் அமைந்துள்ளது. இதன் மையப்பகுதி தேய்ந்துள்ளது. எனவே, அரவைக்கல் எதையோ தாங்கி பிடிப்பது போல காணப்படுகிறது. கூம்புப்பகுதி பளபளப்பாகவும், வழவழப்பாகவும் காணப்படுகிறது. இது அப்பகுதியில் மண்பாண்டம் செய்து கொண்டிருந்த குயவர்கள் பயன்படுத்தும் சக்கரத்தின் அடிப்பாகமாக இருக்க வேண்டும்.

இதனுடைய காலம் சுமார் 11ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தொல்லியல் அலுவலர் சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். இது வழவழப்பாக இருப்பதற்கு சாம்பல் மற்றும் எண்ணெய் பயன்படுத்தி இருக்கலாம். இப்பகுதியில் கள ஆய்வு செய்த போது, ஏராளமான சில்லுகள், கருப்பு, சிகப்பு மண்பாண்டம் கருஞ்சிவப்புண்டங்கள் கண்டறியப்பட்டன. உடைந்த நிலையில் அகல் விளக்குகளும், கிண்ணங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் கல்லால் செய்யப்பட்ட சிறு குண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கருஞ்சிவப்பு மண்பாண்ட பண்பாடு காலகட்டம், பொது ஆண்டுக்கு முன் ஏழாம் நூற்றாண்டு முதல் வரை, வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த பொது ஆண்டு 14ம் நூற்றாண்டு வரை இருக்கலாம். இக்கோயிலில் எதிரே மிகப்பெரிய பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்ததாகவும், அவற்றை சக்தி குண்டு என்று அழைப்பதாகவும் சித்தப்பன் குறிப்பிடுகிறார். மேலும் 2 இடங்களில் கற்கள் உருண்டு வந்துள்ளது எனவும், அவற்றை கடவுளாக வழிபடுவதாகவும் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒரு கல் தான் வனகுண்ட பெருமாள் கோயிலாக வழிபடப்படுகிறது. இது பெருமாள் கோயில் என்றாலும், இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சுதை சிற்பங்களில் அம்மன் வாகனமான சிம்மமும், சிவனின் வாகனமான நந்தியும் அமைக்கப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் கால்வாய் போன்று அமைத்த போது, சுமார் 3 அடி ஆழமுள்ள குழியில் இருந்து ஏராளமான மட்பாண்டங்கள் கிடைக்கும். இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் இப்பகுதியில் களஆய்வு செய்தால், பிராமி எழுத்துக்களுடன் கூடிய மண்பாண்டங்கள் வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இப்பகுதி கிட்டத்தட்ட 1700 ஆண்டுகளுக்கு முன், முதல் வரலாற்றுக் காலத்தில் மத்திய பகுதி வரை அதாவது 14ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் குடியிருப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

மேலும் ஆங்கிலேயர் காலத்தில், இப்பகுதியின் வழியே குதிரை வழித்தடம் சென்றதற்கான வரைபட ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்ட கால பயன்பாட்டில் இருந்த ஒரு குடியிருப்பை அகழ்வாய்வு செய்வதன் மூலம், இப்பகுதியின் தொன்மையும், கலாச்சாரமும் மீட்டெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தொப்பூர் அருகே முற்கால இரும்பு கால குடியிருப்பு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Toppur ,Prof ,Chandrasekar ,Department of History of the Government Art College ,Darmapuri ,Thoppur ,Dinakaran ,
× RELATED கவுன்சலிங் ரூம்