×

44வது ஆண்டு விழா .. அரசியல் அதிகாரத்தை பாமக கைப்பற்றுவதற்கான முயற்சிக்கு உதவ வேண்டும்: தொண்டர்களுக்கு ராமதாஸ் மடல்!

சென்னை :வன்னியர் சங்கத்தின் 44வது ஆண்டு விழாவை முன்னிட்டு பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மடல் எழுதியுள்ளார். ராமதாஸ் எழுதியுள்ள மடலில், தமிழ்நாட்டின் சமூகநீதி வரைபடத்தை தலைகீழாக மாற்றியமைத்த பெருமை கொண்ட வன்னியர் சங்கம் வரும் 20-ஆம் நாள் 43 ஆண்டுகளை நிறைவு செய்து 44-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நினைத்தாலே மனதில் சமூகநீதி உணர்வை பொங்கச் செய்யும் அந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன், பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 43 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நிகழ்வு எனது மனக்கண்களில் இன்னும் பசுமையாக காட்சியளிக்கிறது. அப்போது இருந்த இராமதாசு, இப்போது இருக்கும் அளவுக்கு வலிமையும், செல்வாக்கும் கொண்ட மனிதன் அல்ல. ஆனால், ஆண்ட பரம்பரையாக இருந்து, கல்வி இல்லாததால் அனைத்தையும் இழந்து விட்டு, கூலி வேலை செய்து பிழைத்து, குடிசைகளுக்குள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்ற தீ மட்டும் என் மனதிற்குள் எரிந்து கொண்டிருந்தது. அதனால் கிடைத்த வெளிச்சத்தில் தான், பிரிந்து கிடந்த 28 வன்னியர் அமைப்புகளின் நிர்வாகிகளை திண்டிவனத்தில் உள்ள எனது இல்லத்தில் அழைத்துப் பேசி வன்னியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினேன். நான் நினைத்திருந்தால், மருத்துவப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு பெரும் பொருளீட்டியிருக்கலாம்; கூடவே ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவையும் செய்திருக்கலாம். ஆனால், ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களின் உயர்வுக்கு பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வன்னியர் சங்கத்தை தொடங்கினேன்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக நீதி அமைப்பு என்றால் அது வன்னியர் சங்கம் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக நடத்திய போராட்டங்களையும், பட்ட பாடுகளையும், எம் மக்கள் செய்த தியாகங்களை நினைத்துப் பார்க்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது. இப்போதும் சொல்கிறேன். தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வன்னியர் சங்கம் நடத்தியது போன்ற போராட்டம் அதற்கு முன்பு நடந்ததில்லை; இனி வருங்காலத்தில் நடக்கப் போவதுமில்லை.எந்த வசதியும் இல்லாமல், வாரம் முழுவதும் மருத்துவராக பணியாற்றி ஈட்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, வார இறுதி நாட்களில் ஊர் ஊராக பயணிப்பேன். பல நேரங்களில் பேருந்துகளில் அமருவதற்கு இடம் இல்லாமல் நின்று கொண்டே உறங்கிய நிலையில் பயணித்த நாள்கள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பேருந்து, மகிழுந்து, மாட்டு வண்டி என கிடைத்த வாகனங்களில் சென்று பாட்டாளி மக்களை சந்தித்திருக்கிறேன். அவ்வாறு சந்தித்துப் பேசி, சந்தித்துப் பேசி தான் அவர்களை தமிழக வரலாற்றின் மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டத்திற்கு தயார்படுத்தினேன்.வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளுக்கான 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீடு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. வன்னிய மக்களை போராட்டத்திற்கு தயார்படுத்தவே 1980-ஆம் ஆண்டில் தொடங்கி 1984-ஆம் ஆண்டு வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டி இருந்தது. வன்னியர் சங்க போராட்டக் காலத்தில் மக்களை சந்திப்பதற்காக நான் மேற்கொண்ட தொலைவு பயணங்களை தமிழ்நாட்டு வரலாற்றில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் மேற்கொண்டிருக்கவே முடியாது.

நான்கு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆயத்தப் பணிகளின் தொடர்ச்சியாக 15.03.1984-இல் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் பட்டினிப் போராட்டம் எனது தலைமையில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 25.08.1985-இல் தீவுத்திடலில் இருந்து சீரணி அரங்கத்திற்கு மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அடுத்தக்கட்டமாக 06.05.1986 அன்று ஒருநாள் சாலை மறியல் போராட்டம், 19.12.1986-இல் தொடர்வண்டி மறியல் போராட்டம் என அடுத்தடுத்து பாட்டாளி சொந்தங்களாகிய உங்களின் ஆதரவு – ஒத்துழைப்புடன் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பிறகு தான் தமிழ்நாடு நம்மை திரும்பிப் பார்த்தது.ஆனாலும், அன்றைய அரசு நமது கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட முன்வராத நிலையில் தான் நமது சமூகநீதி நாளான 17.09.1987 அன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்தோம். அந்தப் போராட்டத்தை குலைக்க அரசு கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை இப்போது நினைத்தால் கூட எனது உடல் நடுங்குகிறது.தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் நமது சொந்தங்களின் மார்புகளில் பாயத் தொடங்கின. பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கியும், காவல்துறை தாக்குதலிலும் கொல்லப்பட்டனர்.

அவர்களுக்கு பிறகும் பலர் உயிர்த்தியாகம் செய்தனர்.பாட்டாளி சொந்தங்கள் செய்த தியாகங்களின் பயனாகத் தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை 1989-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். 1951-ஆம் ஆண்டில் தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை 38 ஆண்டுகள் ஒரே பிரிவாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என்ற தனிப்பிரிவை உருவாக்கச் செய்தது நமது சாதனை. அதற்காக நாம் செய்த தியாகங்கள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை.வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய 20% இட ஒதுக்கீடு 108 சாதிகளுக்கு இணைத்து வழங்கப்பட்டதால் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டியதன் பயனாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகளால் அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யபட்டாலும், தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.03.2022-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வெளியாகி ஓராண்டும், 108 நாட்களாகியும் கூட இன்னும் புதிய இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

தமிழக அரசுக்கு இதுதொடர்பாக பலமுறை அழுத்தம் கொடுத்தோம். அதன்பயனாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களின் நிலை குறித்த புள்ளிவிவரங்களை மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு வாங்கி பகுப்பாய்வு செய்து வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் சில வாரங்களில் நிறைவடைந்தால், அடுத்த சில வாரங்களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டு விடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்கக ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் எனது மனதில் எழும் கேள்வி ஒன்று தான்.தமிழ்நாட்டில் எல்லா சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரத்தை நம்மால் வென்றெடுக்க முடியும் எனும் போது, நாம் ஏன் பலரிடமும் சமூகநீதிக்காக கையேந்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அந்த வினா.உண்மை தான்… வன்னியர்களும் சமூகநீதி தேவைப்படும் பிற சமுதாயங்களும் இணைந்து நின்று தேர்தலை சந்தித்தால் மிகவும் எளிதாக அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும். இந்த உண்மையை நாம் உணரும் போது தான் நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். அந்த வகையில், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு நாம் அனைவரும் படிக்கட்டுகளாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வன்னியர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் 44ஆம் ஆண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.வன்னியர் சங்கத்தின் 44-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் வன்னியர் சங்கக் கொடியேற்ற வேண்டும்; போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டின் சிறப்புகள், அதற்காக நாம் செய்த தியாகங்கள் பற்றி இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக இந்த மடலை துண்டறிக்கையாக தயாரித்து வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post 44வது ஆண்டு விழா .. அரசியல் அதிகாரத்தை பாமக கைப்பற்றுவதற்கான முயற்சிக்கு உதவ வேண்டும்: தொண்டர்களுக்கு ராமதாஸ் மடல்! appeared first on Dinakaran.

Tags : Pamaka ,Ramadas ,Chennai ,Ramadas Madal ,Akram ,Bamaka ,Vanniyar Society ,
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்