×

கம்பம்மெட்டு ரோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படுமா?.. மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?

கம்பம்: கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு செல்லும் சாலையோரங்களில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.கடந்த ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான சாலைகள், அரசு நிலம், ேகாயில் நிலம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. சாலைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சாலைகள், நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள சாலைகள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல் நீர்நிலைகளில் உள்ள ஆக்கரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கம்பம் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கிய கம்பம்மெட்டு அடிவாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு ஓடைகள் தற்போது தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்குள்ளாகி நீராதாரங்களை இழந்து நிற்கிறது.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு கம்பத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்கிய புதுக்குளம் கண்மாய் கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் மலை அடிவாரங்களில் தேங்கக்கூடிய நீர் இந்த புதுக்குளத்தில் தேங்கி அங்கிருந்து சேனை ஓடை வழியாக வீரநாயக்கன்குளம் வந்து சேரும். தற்சமயம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளதால் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய புதுக்குளம் கண்மாய் தற்சமயம் மானாவாரி காடாக மாறியுள்ளது.

புதுக்குளம் கண்மாய் கடந்த 20 ஆண்டுகளாக தூர் வாராமல் மழைநீர் வீணாக ரோட்டில் செல்கிறது. அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிகளுக்கு கீழே சென்று விட்டது. கால்நடைகளுக்கும் பொதுமக்களுக்கும் நீராதாரமாக விளங்கக்கூடிய புதுக்குளம் கண்மாயை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாடு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்குளம் ரோட்டில் இருந்து அதை ஒட்டியுள்ள கம்பம்மெட்டு சாலையோரங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து தனி நபர்கள் சிலர் தற்காலிக கடைகள் அமைத்து வருகின்றனர்.

குறிப்பாக பழைய செக்போஸ்ட் அருகிலுள்ள பதினெட்டாம் கால்வாய் மேற்பகுதியில் தொடங்கும் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் முழுக்க முழுக்க மழைநீர் ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து தற்காலிக கடைகள் அமைக்கபட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் சிறிது நாட்களில் தீவிரம் அடையும் பொழுது, கம்பம் பள்ளத்தாக்கு முழுவதும் பரவலாக நல்ல மழை காணப்படும். கம்பம்மெட்டு அடிவாரபகுதியில் கிடைக்கும் கூடுதல் மழையின் காரணமாக புதுக்குளம் முதல் பதினெட்டாம் கால்வாய் வரை உள்ள மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான ஓடை வழியாக மழை நீர் ஓடி வந்து பதினெட்டாம் கால்வாயில் சங்கமிக்கும்.

இந்த இடைப்பட்ட தூரத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளினால் நீரின் போக்கு மாறுபடும். மழைக்காலங்களில் அதிக நீர்வரத்து ஏற்படும்பொழுது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் திடீர் வெள்ளப்பெருக்கால், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உயிருக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழலும் நிலவுகிறது. எனவே நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள தற்காலிக கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடைகள் இருந்த சுவடே இல்லை
கம்பத்தில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் மலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளநீர் , ஓடைகள் வழியாக கம்பம்-ஏகலூத்து சாலையில் உள்ள ஆலமரத்துக்குளம், சிக்காலி ஆகிய குளங்களுக்கு வந்து சேரும். பின்னர் குளங்கள் நிறைந்து வடிகால் மூலம் ஓடை வழியாக கம்பம் நகர்வழியாக வீரப்பநாயக்கன் குளத்தை வந்தடைகின்றன. இந்த ஓடைகள் வரும் வழியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் ஆங்காங்கே தடுப்பணை மற்றும் நிலத்தடி நீர் உயரும் வகையில் ஆழ்துழை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மழைக்காலங்களில் ஓடையில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரானது நேரடியாக பூமிக்கு செல்கின்றன. இதனால் நீர்மட்டம் உயர்ந்து அப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்சி மலை அடிவாரப்பகுதியில் இருந்து தண்ணீர் வரும் ஓடைகளை தனி நபர்கள் இலவ மரங்களை வெட்டி அதன் துண்டுகளை ஓடையில் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தற்போது ஓடைகள் இருந்த சுவடே இல்லாமல் போனது. இதனால் தற்போது ஓடைகள் வழியாக தண்ணீர் வராமல் விளைநிலங்களுக்குள் புகுந்து தண்ணீர் வீணாகின்றன. எனவே, ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஓடைகளை மாவட்ட கலெக்டர் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கம்பம்மெட்டு ரோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படுமா?.. மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனிப்பார்களா? appeared first on Dinakaran.

Tags : Kampammetu Road ,State Highway Department ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...