×

புதுச்சேரி அருகே இசிஆரில் அதிகாலை தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

 

காலாப்பட்டு, ஜூலை 17: புதுச்சேரி அருகே இசிஆரில் அதிகாலை தறிகெட்டு ஓடிய கார் மோதிய விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 4 பெண்கள் பலியாகினர். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே புதுக்குப்பம் மீனவ பெண்கள் தினமும் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு சென்று மீன்கள் வாங்கி வந்து காலாப்பட்டு, கீழ்புத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை புதுக்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50), நாயகம் (50), கோமளம் (52), கெங்கையம்மாள் (53), பிரேமா (45) ஆகிய 6 பேரும், புதுக்குப்பம் இசிஆர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து நின்றனர்.

அப்போது அதிகாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக வந்த கார் சாலையோரம் பேருந்துக்கு காத்திருந்த 6 பெண்கள் மீதும் மோதியது. அதன்பிறகும் கார் தாறுமாறாக ஓடி, அருகே உள்ள அலமேலு என்பவரின் குடிசை வீட்டிற்குள் புகுந்து நின்றது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். இதில் வீடு கடுமையாக சேதமடைந்தது. கார் மோதியதில் லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50) ஆகிய இருவரும் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற 4 பெண்களையும் மீட்டு, புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு கெங்கையம்மாள் (53), நாயகம்(50) ஆகியோர் இறந்தனர். மற்ற 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார், காரை ஓட்டிவந்த சென்னை தனியார் கல்லூரியில் எம்பிஏ படிக்கும் ஆலந்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்பவரை கைது செய்தனர். இவருடன் காரில் நண்பர்கள் கவுதம், சேது, பிரசாந்த், திவ்யா ஆகியோர் வந்துள்ளனர். கீழ்ப்புத்துப்பட்டு அருகே வந்தபோது, குறுக்கே வேறொரு வாகனம் வந்ததால் சாலையோரம் அமர்ந்திருந்த மீன் விற்கும் பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

The post புதுச்சேரி அருகே இசிஆரில் அதிகாலை தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Kalapat ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்