×

இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு: இப்போ பேப்பர் பேனா… தூக்கி போட்டா மரமாகும்…

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவபாலன் (25). மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படித்துள்ளார். படிப்பை முடித்தவுடன் வேலைக்கு செல்லாமல் சொந்த தொழில் செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதிலும் குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்த போது தான் பேப்பர் பேனா ஐடியா கிடைத்துள்ளது. அதிலும் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத பேப்பர் பேனா ஒரு பக்கம் என்றால், அந்த பேப்பர் பேனாவிற்கு மூலப்பொருளான பேப்பர் மரத்திலிருந்து கிடைக்கிறது. அதற்காக மரங்கள் அழிக்கப்படுகிறது. எனவே மரம் நடுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே சுயதொழில் செய்வதற்கான வேலையை தொடங்கியுள்ளார்.

சுயதொழிலுக்கு மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் கடன் பெற்று பேப்பர் பேனா தயாரிக்கும் தொழிலை தனது வீட்டிலேயே ஆரம்பித்தார். அவரது கிரியேட்டிவிட்டியில் நாம் வியக்க வேண்டியது ஒன்று. அதாவது பேப்பர் பேனாவை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தால் அது மண்ணில் மக்கிவிடும். அதே நேரத்தில் அத்துடன் விதைகளையும் சேர்த்தால் அது மரமாக வாய்ப்பிருக்கும் அல்லவா.. அப்படி தான் பேப்பர் பேனாவில் அடிப்பகுதியில் விதைகளை வைத்து பேனாக்களை உருவாக்க தொடங்கினார். இந்த பேனாவின் அடிப்பகுதியில் காட்டு மர விதைகளான பூவரசு, இலவம், அரளி உள்ளிட்ட விதைகள் கொண்டு அடைக்கப்படுகின்றது.

இந்த பேனாவை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தவுடன், காகிதம் மக்கிய பின்பு அதன் விதைகள் முளைப்புத் திறன் ஏற்பட்டு, முளைக்கத் தொடங்கிறது. ஒருவர் வாரத்திற்கு ஒரு பேனா பயன்படுத்தினால், மாதம் 4 பேனாக்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் 4 மரங்களை நடுவதற்கு சமம். தற்போது திருமண நிகழ்ச்சி போன்ற வீட்டு விஷேசங்களில் தாம்பூலப்பை கொடுப்பதற்கு பதிலாக மரக்கன்றுகள், விதைப்பந்துகள், புத்தகங்கள் கொடுப்பது என பயனுள்ள விஷயங்களை செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்த பேப்பர் பேனாவும் இடம்பெற்று வருகிறது. பிறந்த நாள், திருமண நாள், தலைவர்களின் பிறந்த நாள் ஆகியவற்றிற்கு ஆர்டர் தருபவரின் பெயரை அச்சிட்டு தருகிறார் சிவபாலன். ஒரு பேனா ரூ.5க்கும், வாழ்த்து அச்சிட்ட பேனா ரூ.10க்கும் விற்பனை செய்து வருகிறார். சுயதொழிலுடன், சுற்றுச்சூழல் மீதும் அக்கறை கொண்ட சிவபாலனுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

The post இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு: இப்போ பேப்பர் பேனா… தூக்கி போட்டா மரமாகும்… appeared first on Dinakaran.

Tags : Sivapalan ,Ayambalayam ,Pativeeranpatti, Dintugul district ,
× RELATED ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் விழா அமர்க்கள கறி விருந்து