×

பாஜ எம்எல்ஏவை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்‘வானதி இங்கே… வாக்குறுதி எங்கே…? வானதிக்கு லாபம், மக்களுக்கு நாமம்…’

கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டித்து, ‘வானதி இங்கே… வாக்குறுதி எங்கே…?, வானதிக்கு லாபம், மக்களுக்கு நாமம்’ என்று மக்கள் நீதி மய்யத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜ சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது தொடர்ந்து முன்னிலை வகித்த நடிகர் கமல், இறுதியில் பின்னடைவை சந்தித்தார்.

இதனால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் வானதி சீனிவாசன். இவர் 2021 தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்து உள்ளார். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில துணைத்தலைவர் தங்கவேலு தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், இளைஞர் அணி மாநில செயலாளர் கவிஞர் சிநேகன் கண்டன உரையாற்றினார். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘வானதி இங்கே… வாக்குறுதி எங்கே…?, ‘வானதிக்கு லாபம், மக்களுக்கு நாமம்’, ‘சொன்னது என்னாச்சு’, ‘வானதி எம்எல்ஏ சொன்ன வார்த்தை காற்றோடு போச்சு’, ‘அடுக்குமாடி பார்க்கிங் வசதி எங்கே’, ‘தெருவெல்லாம் இணைய சேவை எங்கே’, ‘உக்கடம் மீன் மார்க்கெட் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு எங்கே’, ‘காந்திபுரம் கிராஸ்கட் சுரங்கபாதை எங்கே’ போன்ற பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

* சபரிமலைக்கு பயணம்
வானதி சீனிவாசனுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் போராட்டம் நடத்திய அதே நேரத்தில் அவர் வடகோவை ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்கு நேற்று புறப்பட்டார். அவருடன் 10 பேர் சென்றுள்ளனர்.

The post பாஜ எம்எல்ஏவை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்‘வானதி இங்கே… வாக்குறுதி எங்கே…? வானதிக்கு லாபம், மக்களுக்கு நாமம்…’ appeared first on Dinakaran.

Tags : Manima ,BJP MLA ,Vanathi ,Coimbatore ,BJP ,MLA ,Vanathi Srinivasan ,
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...