×

பொது இடங்களில் அழகான பெண்களை ஆபாசமாக படம் எடுத்து டெலிகிராம் குழுவில் வாலிபர்களுக்கு விற்று வந்த பி.டெக் பட்டதாரி கைது

சென்னை: பொது இடங்கள், வணிக வளாகங்களுக்கு வரும் அழகான இளம் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படம் எடுத்து, அதை டெலிகிராம் குழுவில் உள்ள வாலிபர்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வந்த பி.டெக் பட்டதாரியை சைபர் க்ரைம் போலீசார் ஈரோட்டில் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், செல்போன், ஆயிரக்கணக்கான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் வைத்திருந்த ஹார்ட் டிஸ்க்கை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரின் புகைப்படம் அவரது ஆண் நண்பருக்கு மோசடி கும்பல் டெலிகிராம் செயலி மூலம் அப்பெண்ணின் படத்தை விற்பனை செய்துள்ளது.

அது குறித்து அப்பெண்ணிடம் அவரது ஆண் நண்பர் தவறான நோக்கில் அவரை அணுகியுள்ளார். அப்போது தான், தனது புகைப்பட விஷயம் அவருக்கு தெரியவந்தது. அதை தொடர்ந்து உடனே பாதிக்கப்பட்ட இளம் பெண், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தியிடம் புகார் அளித்தார். அப்புகாரை சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி புகார் அளித்த இளம் பெண்ணின் புகைப்படங்களை விற்பனை செய்யப்பட்ட டெலிகிராம் ஐடியை வைத்து விசாரணை நடத்தியபோது, ஈரோடு பகுதியில் இருந்து புகைப்படம் அனுப்பியது தெரியவந்தது. உடனே இன்ஸ்ெபக்டர் கவிதா தலைமையிலான போலீசார் ஈரோடு சென்று அங்குள்ள மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் புகைப்படங்களை டெலிகிராம் குழுவில் விற்பனை செய்து வந்தது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அக்ரகாரம் பகுதியை சேர்ந்த என்.எம்.ஆர்யா(22) என தெரியவந்தது. உடனே ஆர்யாவை பிடித்து விசாரணை நடத்திய போது, ஆர்யா பி.டெக் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். வேலை கிடைக்கும் வரை அவரது தந்தை மகேஸ்வரன் நடத்தி வரும் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்2019ம் ஆண்டு டெலிகிராம் பக்கத்தில் ஒரு நண்பர் கிடைத்துள்ளார். அவரிடம் ஆர்யா பல ஆபாச வீடியோக்களை கேட்டு வாங்கியுள்ளார்.

அப்போது தான் டெலிகிராம் குழுவில் உள்ள நபர்கள் அதிகளவில் கல்லூரி மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் இருந்தால் அனுப்புங்கள் என்றும், அதற்கு பணம் தருவதாக கூறியுள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு ஆர்யா, ஈரோடு, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை, ஊட்டி என பல இடங்களுக்கு சென்று சுற்றுலா வரும் இளம் பெண்கள் மற்றும் இளம் காதல் ஜோடிகளை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார். அதேபோல், பேருந்துகள், சைக்கிள், ஸ்கூட்டர்களில் வரும் கல்லூரி மாணவிகளை புகைப்படம் எடுத்துள்ளார். அதில், ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டும் டெலிகிராம் குழுவில் உள்ள புகைப்படம் தேவைப்படும் நபர்களுக்கு , புகைப்படத்திற்கு ஏற்றார் போல், கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்களுக்கு என தனித்தனியாக விலை நிர்ணயம் செய்து, ஒரு ஆபாச படம் ரூ.50 முதல் ரூ.200 வரை விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

இதன் மூலம் அவருக்கு அதிக பணம் கிடைத்தது. அதனால் டெலிகிராம் குழுவில் உள்ள சக நண்பர்களுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பெண்களின் புகைப்படத்தை எடுத்து அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு விற்பனை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் தான், புகார் அளித்த சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண், கடந்த 2022ம் ஆண்டு வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு துணி எடுக்க தனது தோழியுடன் வந்த போது, அவருக்கு தெரியாமல் சென்னையில் உள்ள நண்பர்கள் ஆபாசமாக புகைப்படம் எடுத்து ஈரோட்டில் உள்ள ஆர்யாவுக்கு அனுப்பியுள்ளனர். அதேபோல், ஆர்யா மேட்டுப்பாளையத்தில் உள்ள வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட இளம் பெண்களின் புகைப்படத்தை சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த வகையில் தான் சென்னையில் எடுக்கப்பட்ட புகார் அளித்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆர்யா வாங்கி அதை விற்பனை செய்தது விசாரணையில் உறுதியானது. இதுபோல் கடந்த 2019ம் ஆண்டுகளில் இருந்து அந்த மோசடி நடந்து வந்தது தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளாக ஆபாச புகைப்படங்களை பரிமாறிக்கொள்ளும் நபர்கள் இதுவரை ஒருவரை ஒருவர் பார்த்ததும் கிடையாது. அனைத்தும் டெலிகிராம் செயலியின் மூலம் பேசி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நண்பர்கள் மூலம் புகைப்படங்களை பகிர்ந்து அதிகளவில் பணம் சம்பாதித்துள்ளனர். இந்த மோசடிக்கு பயன்படுத்திய டெலிகிராம் குழுவில் 1,100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவில் நாடுமுழுவதிலும் இருந்து ஆபாச புகைப்படும் வாங்குவோர் இருப்பது தெரியவந்தது.அதைதொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட பி.டெக் பட்டதாரியான ஆர்யாவை சைபர் க்ரைம் போலீசார் ஈரோட்டில் கடந்த 13ம் தேதி கைது செய்தனர். அவனிடம் இருந்து பொது இடங்களில் புகைப்படம் எடுக்க பயன்படுத்திய செல்போன், லேப்டாப், புகைப்படம் விற்பனை செய்த பணத்தை பெற பல்வேறு வங்கிகளில் தொடங்கப்பட்ட கணக்கு புத்தகங்கள், இளம் பெண்களின் புகைப்படம் மற்றும் அதை ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட இளம் பெண்களின் புகைப்படங்கள் என ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் சேகரித்து வைத்திருந்த 2டிபி கொண்ட ஹார்ட் டிஸ்க் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் அதிகளவில் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்கள் தான் ஆர்யா அதிகளவில் எடுத்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆர்யா அளித்த தகவலின்படி சென்னையில் இளம் பெண்களை புகைப்படம் எடுக்கும் நபர்களை சைபர் க்ரைம் போலீசார் டெலிகிராம் குழு உதவியுடன் தேடி வருகின்றனர்.

The post பொது இடங்களில் அழகான பெண்களை ஆபாசமாக படம் எடுத்து டெலிகிராம் குழுவில் வாலிபர்களுக்கு விற்று வந்த பி.டெக் பட்டதாரி கைது appeared first on Dinakaran.

Tags : B.Tech ,Chennai ,Telegram ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...