×

கடந்த வாரத்தை விட மீன் வரத்து அதிகரித்த போதிலும் காசிமேட்டில் குறையாத மீன் விலை: வஞ்சிரம் ரூ.1400, சங்கரா ரூ.750, வவ்வால் ரூ.800க்கு விற்பனை, அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னை காசிமேட்டில் கடந்த வாரத்தை விட மீன் வரத்து அதிகரித்த போதிலும், நேற்று மீன் விலை குறையவில்லை. வஞ்சிரம் ரூ.1400, சங்கரா ரூ.750, வவ்வால் ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர். மீன்கள் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை என 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. தடைக்காலத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 15ம் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

தடைக்காலம் முடிந்து கடந்த வாரத்துடன் 4 ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. ஆனாலும் மீன் விலை குறைந்தபாடில்லை. தடைக்காலத்தில் எந்த விலைக்கு மீன்கள் விற்கப்பட்டதோ, அந்த விலைக்கே மீன்கள் விற்பனையாகியது. இதே நிலை தான் நேற்றும்(ஞாயிற்றுக்கிழமை) நீடித்தது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என அதிகாலை முதலே குவிய தொடங்கினர். இதனால், காசிமேடு துறைமுகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதே நேரத்தில் காசிமேடு மின் பிடி துறைமுகத்திற்கு 160 முதல் 200 விசை படகுகளில் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி இருந்தனர். மீன்கள் வரத்து அதிகமாக இருந்த போதிலும் மீன்கள் விலை குறைந்தபாடில்லை. பழைய மீன்களின் விலைக்கே விற்பனையானது. குறிப்பாக வஞ்சிரம், சங்கரா, வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலை அதிகமாக இருந்தது. அதாவது வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300-ரூ.1400 வரை விற்கப்பட்டது. சங்கரா கிலோ ரூ.750, வவ்வால் ரூ.800, இறால் ரூ.600, நண்டு ரூ.600, கிழங்கான் ரூ.450, கடம்பா ரூ.300, பாறை ரூ.600 என விற்பனை செய்யப்பட்டது.

விலை அதிகமாக இருந்த போதிலும் விலையே பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர். தற்போது அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் சென்னைக்கு வருவதில்லை. அதனால் புறநகர் பகுதியில் உள்ள மின் விற்பனை கூடங்களில் மீன்கள் விலை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஆடி மாதம் தொடங்க உள்ளது. இதனால் வரும் வாரங்களில் மீன்கள் விலை குறைய வாய்ப்பில்லை. அதே நிலையே நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

The post கடந்த வாரத்தை விட மீன் வரத்து அதிகரித்த போதிலும் காசிமேட்டில் குறையாத மீன் விலை: வஞ்சிரம் ரூ.1400, சங்கரா ரூ.750, வவ்வால் ரூ.800க்கு விற்பனை, அசைவ பிரியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kasimat ,CHENNAI ,Chennai Kasimet ,Vanjiram… ,Vanjiram ,Shankara ,Dinakaran ,
× RELATED தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது...