×

ஹஜ் பயணம் முடிந்து 150 பேர் சென்னை திரும்பினர்: விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு

சென்னை: ஹஜ் பயணம் முடிந்து திரும்பிய 150 பேருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் முதல் கட்டமாக ஹஜ் புனித யாத்திரை பயணத்தை முடித்த 150 பேர் ஏர்இந்தியாவின் சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் இருந்து 3,954 பேர் ஹஜ் புனித யாத்திரை பயணத்தை மேற்கொண்டனர்.

முதல் கட்டமாக, நேற்று ஹஜ் புனித பயணத்தை முடித்த 150 பேர் சென்னை வந்துள்ளனர். அவர்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நாங்கள் வரவேற்கிறோம். இந்த ஆண்டு 3,954 பேரின் புனித ஹஜ் யாத்திரை பயணத்துக்காக தமிழ்நாடு முதல்வர் ரூ..10 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அந்நிதியை முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்கப்பட்டது. இதேபோல் கேரள மாநிலத்தின் கொச்சி வழியாக முதன்முறை ஹஜ் பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டது.

இதேபோல், இந்த ஆண்டு 600 கிறிஸ்தவர்கள் புனித ஜெருசலேம் பயணம் மேற்கொள்வதற்கு அரசு மானியம் வழங்கப்படும். நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிப்பது பற்றிய சட்டப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்காக வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்பு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

The post ஹஜ் பயணம் முடிந்து 150 பேர் சென்னை திரும்பினர்: விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hajj ,Minister ,Senji Mastan ,Chennai International Airport ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்