×

களைகட்டுகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம் மீண்டும் ஒலிக்கும் கலைஞரின் குரல் உரையாடி நெஞ்சம் நெகிழும் மக்கள்: மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் தொழில்நுட்பம்

மதுரை: மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மெய்நிகர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ஒளிப்பட காட்சியில், கலைஞருடன் அமர்ந்து பேச்சை கேட்ட வாசகர்கள் நெகிழுந்து போனார்கள். மதுரையில், ரூ.215 கோடி மதிப்பில், ஏழு தளங்களுடன் சர்வதேசத் தரத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அமைச்சர்களுடன் அவர், நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று பார்வையிட்டார். முதல் தளத்தில், கலைஞர் அரங்கம் அமைக்கப்பட்ட அரங்கில் கலைஞரின் நூல்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை நூலக அலமாரிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் டிவியில், மெய்நிகர் தொழில்நுட்பத்தில் (ஆக்மென்ட் ரியாலிட்டி) கலைஞர் தோன்றிப் பேசும் புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இருக்கையில் கேமரா முன்பாக அமர்ந்து பேசினால், எதிரே உள்ள டிஜிட்டல் டிவியில் கலைஞருடன் நாம் நேரடியாக உரையாடுவது போலவும், நமது ேகள்விகளுக்கு கலைஞர் பதிலளிப்பது போலவும் காட்சிகள் தெரியும்.

இந்த இடத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் டிவி அருகே உள்ள சோபாவில் அமர்ந்தவுடன், டிஜிட்டல் டிவியில், கலைஞருடன் அவர்கள் இருவரும் அமர்ந்திருப்பது போன்ற காட்சி ேதான்றியது. அவர்களிடம் கலைஞர் பேசுகையில், ‘‘என் முதல் பிரவேசம் பொதுவாழ்வு. அடுத்து சமுதாய பணி. அதில் இருந்து தான் அரசியல். அதற்கு காரணம் என் உழைப்பு, உழைப்பு. இதனை அண்ணாவே எனது பிறந்தநாள் விழாவில் கூறினார். பாலத்திற்கு இரண்டு பக்கம் பாதுகாப்பு சுவர் இருப்பது போல், எனது வாழ்வில் ஒருபுறம் பொதுவாழ்வு, மறுபுறம் அரசியல் இருக்கிறது. சிறுவயதில், சமுதாயப்பணி, மொழிப்பணியில் ஈடுபட்டவன் நான். எதையும் எதிர்பார்க்காமல் பொதுவாழ்வு, சமுதாயத்திற்காக உழைக்க கூடியவன்…’’ என அவர் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வரும், அமைச்சர் துரைமுருகனும் நெகிழ்ந்து, கலைஞர் கையை தொட்டு வணங்கினர். இருவர் கண்களும் பனித்து, தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள இந்த மெய்நிகர் தொழில்நுட்பம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று நூலகத்துக்கு வந்த பொதுமக்கள், பார்வையாளர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு சோபாவில் அமர்ந்து கலைஞருடன் மெய்நிகர் காட்சி மூலம் உரையாடும் வாய்ப்புப் பெற்றனர். இந்த அரிய வாய்ப்பை தங்கள் செல்போனில் செல்பி மற்றும் வீடியோ பதிவு செய்து கொண்டு மகிழ்ந்தனர். அனைவரிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மெய்நிகர் தொழில்நுட்ப காட்சியை அன்கிடெய் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இதுதொடர்பாக பொறியாளர் பாலா கூறுகையில், ‘‘நாம் விரும்பிய ஒருவர் இல்லையென்றால், அவருடைய வீடியோ படக்காட்சிகளைக் கொண்டு, அவருடன் பேசும் சாத்தியம் தான் மெய்நிகர் தொழில்நுட்பம்.

இந்த நூலகத்தில் இதனை அமைக்கவேண்டும் என்பதற்காக புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு, அதில், கலைஞரின் பேச்சை 13 நிமிடம் ஓடச்செய்து, பதிவேற்றம் செய்துள்ளோம். அந்த ஒளிப்படம் டிவியில் ஓடும் போது, டிவி அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தவுடன் அவர்களது உருவம் அங்குள்ள வீடியோ கேமரா மூலம் பதிவாகி, கலைஞர் ஒளிப்படக்காட்சியில் தானாக இணைந்துவிடும். கலைஞரும், பொதுமக்களும் இணைந்து பேசுவது போல் டிஜிட்டல் டிவியில் ெதரியும். இதுபோன்ற மெய்நிகர் தொழில்நுட்பத்தில் ஒளிப்படக்காட்சி முதல்முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post களைகட்டுகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம் மீண்டும் ஒலிக்கும் கலைஞரின் குரல் உரையாடி நெஞ்சம் நெகிழும் மக்கள்: மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் தொழில்நுட்பம் appeared first on Dinakaran.

Tags : Weeding ,Centenary Library ,Madurai ,Artist Centenary Library ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது