×

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ்குமார், கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் 2வது கட்ட ஆலோசனை கூட்டம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ்குமார், கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இன்றிரவு விருந்து அளிக்கிறார். 2024ல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் கீழ், அம்மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 15 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில், பாஜவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முடிவெடுக்கப்பட்டது. மேலும், கூட்டணி தொடர்பாக தொடர்ந்து ஆலோசிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18 தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றும் நாளையும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரவு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க வரும்படி எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மம்தா தான் விருந்தில் பங்கேற்க போவதில்லை. ஆனால் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரம், மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, மூத்த எம்பி டெரிக் ஓ பிரையன் ஆகியோர் விருந்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, நாளை நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிப்பது, கூட்டணிக்கான கட்டமைப்பை உருவாக்க 3 செயற்குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் இடையே மாநில அளவில் இணக்கத்தை ஏற்படுத்துதல், கூட்டு பேரணிகளுக்கான அட்டவணையைத் தீர்மானித்தல் போன்றவை குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதலாக மதிமுக, கொங்கு தேசம் மக்கள் கட்சி (கேடிஎம்கே), விடுதலை சிறுத்தைகள், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி), பார்வேர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) உள்ளிட்ட 10 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி சேவைகள் அவசர சட்டம் தொடர்பான விவகாரத்தில் இதுநாள் வரை மவுனமாக இருந்த காங்கிரஸ், தற்போது ஆம் ஆத்மிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்த அவசர சட்டத்தை மசோதாவாக ஒன்றிய அரசு தாக்கல் செய்யும்போது அதை காங்கிரஸ் எதிர்க்கும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆம்ஆத்மி அரசியல் விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டம் நேற்று கூட்டியது. முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த கூட்டத்தில் டெல்லி அவசர சட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் முடிவு வரவேற்கப்பட்டது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி ராகவ் சதா கூறுகையில், ‘’காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து, பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் அதற்கு முன்னதாக இரவு விருந்திலும் பங்கேற்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது,’’ என்று தெரிவித்தார். ஆம்ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் பங்கேற்க உள்ளனர். தேசிய அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகளின் 2வது கட்ட ஆலோசனை கூட்டம் கூடுதல் கவனம் மற்றும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

* ‘டெல்லி அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கும்’
காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘’கூட்டாட்சியை அழிக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு அரசை நிர்வகிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதையும் எதிர்க்கிறது. நேற்று முன்தினம் டெல்லி அவசர சட்டத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்று நடந்த கூட்டத்தில், ஏற்கனவே முடிவு எடுத்தபடி, அதனை ஆதரிப்பதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது,’’ என்று தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ்குமார், கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Baja ,elections ,Stalin ,Mamta ,Nidishkumar ,Kejriwal ,New Delhi ,Congress ,Dishagga ,Trinamul Congress ,Aam Aadmi ,Samajwadi ,United ,Nitishkumar ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...