×

பொது இடங்களில் அழகான பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வாலிபர்களுக்கு விற்பனை: ஈரோட்டில் பி.டெக் பட்டதாரி கைது

சென்னை: பொது இடங்களில் அழகான இளம் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படங்களை டெலிகிராம் போன்ற சமூக வலைத்தள குழுக்கள் மூலம் வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்த பி.டெக் பட்டதாரியை சைபர் க்ரைம் போலீசார் ஈரோட்டில் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், வங்கி கணக்கு அட்டைகள், ஆபாச புகைப்படங்கள் வைத்திருந்த ஹாட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரியில் படிக்கும் மாணவிகள், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் இளம் பெண்கள் மற்றும் திருமணான அழகான இளம் பெண்களை மர்ம கும்பல் ஒன்று குறிவைத்து அவர்கள் மெய்மறந்த நேரங்களில் அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து, அதை டெலிகிராம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள குழுக்களில் புகைப்படங்களை வாலிபர்களுக்கு விற்பனை செய்யும் சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது.

டெலிகிராம் மற்றும் இன்டாகிராம் பக்கங்களில் அழகான இளம் பெண்கள் புகைப்படம் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வேண்டுமா என்று விளம்பரம் செய்கிறார்கள். அதை விரும்பும் திருமணம் ஆகாத இளைஞர்கள் மற்றும் வயதான நபர்கள் பலர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்கிறார்கள். அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள், தங்களுடைய டெலிகிராம் முகவரி கொடுத்து அதில் இணைய சொல்கிறார்கள். அதன்படி இணையும் நபர்களுக்கு கல்லூரி மாணவிகள், திருமணமாகாத இளம் பெண்கள், திருமணமான அழகான பெண்கள் புகைப்படங்கள் என்று ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயம் செய்து தெரிவிக்கின்றனர்.

பிறகு புகைப்படம் தேவைப்படுவோர், ஒரு புகைப்படத்திற்கு அதாவது, ஆபாசம் மற்றும் இயற்கை சார்ந்த புகைப்படங்களுக்கு என தனித்தனியாக கட்டணம் செலுத்தி தங்களுக்கு தேவையான புகைப்படங்களை ஜிபே, போன்பே மூலம் மர்ம நபர்களுக்கு பணத்தை செலுத்தி தங்களுக்கு தேவையான புகைப்படத்தை பெறுகின்றனர். இந்த கலாச்சாரம் தற்போது சென்னையிலும் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது. அந்த வகையில் தான் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் ஆபாசமான புகைப்படம், அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்டு அவருக்கு தெரியாமலேயே விற்பனை செய்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னை மாநகர தெற்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவில் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், நான் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளிக்காக வேளச்சேரியில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்கு துணி எடுக்க சென்ற போது, தனக்கு தெரியாமல் சிலர் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த படத்தை டெலிகிராம் செயலியில் விற்பனை செய்துள்ளனர். இது எனது ஆண் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு தெரியவந்தது. எனவே சம்பந்தபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் படி, நடவடிக்கை எடுக்க இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி உத்தரவுப்படி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து, ஆபாச புகைப்படம் விற்பனை செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் முகவரியை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், ஈரோட்டில் இருந்து டெலிகிராம் செயலியில் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் ஈரோடு சென்று ஈரோடு மாவட்ட போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்திய போது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த என்.எம்.ஆர்யா(22) என தெரியவந்தது. பி.டெக் பட்டதாரியான இவர், ஈரோட்டில் தங்கி அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்களில் வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போன் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அதை ஆபாசமாக சித்தரித்து டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குறிப்பிட்ட குழுவில் பதிவு செய்து, ஆபாச படம் கேட்கும் நபர்களுக்கு ஒரு படம் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், ஆர்யா சென்னையில் உள்ள தனது நண்பர்கள் மூலம் பிரபல வணிக வளாகங்கள், பூங்காக்கள், கடற்கரைகளுக்கு வரும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பியதும், அதனை ஆபாச புகைப்பட்ங்கள் கேட்கும் நபர்களுக்கு விற்பனை செய்து வந்தும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து ஆர்யாவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன், 1 லேப்டாப், வங்கி கணக்கு அட்டைகள், பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் சேகரித்து வைத்திருந்த ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னையில் உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

The post பொது இடங்களில் அழகான பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வாலிபர்களுக்கு விற்பனை: ஈரோட்டில் பி.டெக் பட்டதாரி கைது appeared first on Dinakaran.

Tags : B.Tech ,Erode ,Chennai ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...