×

வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா தேர் பவனி கோலாகலம்

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மும்பை வசாய் பகுதியை சேர்ந்த மீனவர்களால் கொண்டாடப்படும் உத்திரிய மாதா தேர் பவனி நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மும்பை வசாப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சார்பில் உத்திரிய மாதா திருவிழா நடத்தப்படும்.

அதன்படி இந்தாண்டு உத்திரிய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 6ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்றிரவு நடந்தது. பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தேரை புனிதம் செய்து வைத்தார். இதையடுத்து புனித உத்திரிய மாதா, செபஸ்தியர், மிக்கேல் ஆண்டவரின் சிறிய தேர்களை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் தோள்களில் சுமந்து வந்தனர்.

வேளாங்கண்ணி கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது இருபுறமும் நின்றிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேர்களின் மீது மலர்களை தூவினர். தேர்கள் மீண்டும் ஆலயத்துக்கு வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர். உத்திரிய மாதா தேர்பவனி இன்று காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

The post வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா தேர் பவனி கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Bhavani Kolagalam ,Velankanni Temple ,Nagai ,Uttriya Mata Char ,Vasai ,Mumbai ,Velankanni Holy ,Church ,Mata Char Bhavani Kolakalam ,
× RELATED வேதாரண்யம் கடல் பகுதிகளில் பலத்த...