×

தென்மேற்கு பருவமழை குறைவு களங்களில் கொப்பரை, நார் உலர வைப்பு பணி மும்முரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்து வெயிலின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், களங்களில் கொப்பரை, நார் உலர வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகப்படியாக உள்ளது. பொள்ளாச்சி மட்டுமின்றி, கிணத்துக்கடவு, நெகமம், வடக்கிபாளையம், கோவில்பாளையம், ஆனைமலை, ராமபட்டிணம், அம்பராம்பாளையம், ஆழியார், நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளன.

தென்னையில் உற்பத்தியாகும் தேங்காய் பிரித்து உரிக்கப்பட்டு, அதை பிரித்து எடுக்கப்படும் கொப்பரைக்கு வெளிமார்க்கெட்டில் அதிக கிராக்கி உள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளதால், சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட களங்களில் கொப்பரை உலர வைக்கப்படுகிறது. கொப்பரையை உலர வைத்து பின்னர், எண்ணெய், பால்பவுடர் உள்ளிட்டவை தயாரிக்க வெளியிடங்களுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும் போது, கொப்பரை உலர வைக்கும் பணி அதிகளவில் இருக்கும். அந்நேரத்தில் கொப்பரை உற்பத்தி அதிகரிப்பதுடன், வெளியிடங்களுக்கு ஏற்றுமதியும் அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 2வது வாரம் துவக்கம் வரை கோடை வெயிலின் தாக்கத்தால் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இடையே ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சில நாட்கள் கோடை மழை பெய்தது. அப்போது, கொப்பரை உலர வைக்கும் பணி சற்று தடைபட்டது. அதன்பின், கடந்த மாதம் இறுதியிலிருந்து தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. இந்த மாதம் முதல் வாரம் வரை வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது சாரல் மழையால், கொப்பரை உலரவைக்கும் பணி மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுற்றுவட்டார கிராமங்களில் பருவமழை பொழிவு குறைந்து பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், களங்களில் கொப்பரை உலர வைக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பகல் மட்டுமின்றி வெயின் தாக்கம் போகும்வரை இரவு நேரத்திலும் கொப்பரை உலர வைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதுபோல, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் நார் உலர வைத்து உற்பத்தி செய்யும் பணியும் தீவிரமாக நடக்கிறது. தற்போது மழை குறைந்து வெயிலின் தாக்கம் இருப்பதால், மழை மீண்டும் வலுப்பதற்குள், கொப்பரை மற்றும் நார் உலர வைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம் என, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

The post தென்மேற்கு பருவமழை குறைவு களங்களில் கொப்பரை, நார் உலர வைப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,copra ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...