×

தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு விரைவில் முதலிடம் பெறும்: கலைஞர் நூலக திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழ்நாடு விரைவில் முதலிடம் பெறும் என்று மதுரையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகத்தில் இருந்த வருகை பதிவேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தை பதிவிட்டார்.

திறப்பு விழாவை தொடர்ந்து மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கலைஞர் நூலகத் திறப்பு விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என அடிக்கடி நான் சொல்லி வருவது கல்வியும், சுகாதாரமும்தான். அதனால்தான் கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான ஜூன் 15ம் தேதி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை சென்னை சைதாப்பேட்டை கிண்டியில் துவக்கி வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஜூலை 15ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்துள்ளேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வேன் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னை மருத்துவமனை, மதுரை நூலகம். இவை இரண்டும் திமுகவின் தேர்தலில் அளிக்காத வாக்குறுதிகள்.

தமிழ்நாடு தலைநகர் சென்னை என்றால், மதுரை தமிழகத்தின் கலைநகர். தலைநகரில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் நூலகத்தை அவர் தம்பி கலைஞர் அமைத்துத் தந்தார். மதுரையில் கலைஞர் நூலகத்தை நான் அமைத்திருக்கிறேன். தமிழ் பற்று இருந்ததால்தான் கலைஞர் போராடி மிகப்பெரிய தலைவரானார். முதலில் கலைஞரிடம் அண்ணா சொன்னது, நன்றாகப் படி என்பதுதான். நானும் உங்களை பார்க்கும்போது நன்றாக படி என்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை கைவிடக்கூடாது. படிப்புதான் திருட முடியாத நிலையான சொத்து. நீதிக்கட்சி கல்வியை முதலில் கொடுத்தது. கல்விப்புரட்சியை திமுக ஆட்சி செய்தது.

கலைஞர் இலவசக் கல்வி என்றபோது பல்லாயிரக்கணக்கானோர் மகிழ்ந்தனர். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவரும் கலைஞர்தான். அந்த நாளில்தான் இந்த நூலகத்தை திறந்து வைத்துள்ளோம். அனைத்து பள்ளிகளிலும் நூலகங்களை கலைஞர் அமைத்தார். தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. விரைவில் முதலிடம் பெறும். அதனை பெறவே அனைத்து பணிகளையும் செய்கிறோம்.

அனைத்து தரப்பு மக்களின் அரசாக திமுக அரசு போற்றப்பட்டு வருகிறது. அரசு உருவாக்கும் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்துங்கள். படியுங்கள். படிப்பு காலத்தில் கவனத்தை திசை திருப்பாதீர்கள். நாளைய நம்பிக்கை, எதிர்காலம் நீங்கள்தான். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. புத்தகத்தில் உலகை படிப்போம். உலகை புத்தகமாக படிப்போம் இவ்வாறு அவர் பேசினார்.

The post தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு விரைவில் முதலிடம் பெறும்: கலைஞர் நூலக திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Artist Library Opening Festival ,G.K. Stalin ,Madurai ,India ,B.C. ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...