×

கோத்தகிரியில் கரடிகளை கூண்டு வைத்து பிடிப்பதில் வனத்துறை அலட்சியம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் நாளுக்கு நாள் கரடி தொல்லை அதிகரித்து வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்காமல் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான அரவேனு, அளக்கரை, பெப்பேன், கைத்தளா, அக்கால், முருகன் காலனி, கேர்பெட்டா, பன்னீர், புதூர், கைக்காட்டி, கெரடா, தொத்தமுக்கை, இருப்புக்கல் உள்ளிட்ட கிராமங்களில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.தற்போது, வனப்பகுதிகளில் காலநிலைக்கு ஏற்றவாறு அவற்றிற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வர தொடங்கி உள்ளது. கிராமப்புற பகுதிகளில் உள்ள வனப்பகுதி சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் உலா வந்த கரடிகள், தற்போது நகர்புற பகுதிகளிலும் உலா வரத்தொடங்கி உள்ளது.

அதுமட்டுமின்றி தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு தோட்ட தொழிலாளர்களையும் அச்சுறுத்தும் செயலிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.  இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தாலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பு தருகிறோம் என கூறி அந்த சமயத்திற்கு வனத்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து விடுகின்றனர்.இதே சம்பவம் அருகில் உள்ள கிராமங்களில் தொடர்ந்தால் கூண்டு பற்றாக்குறை அல்லது கூண்டு வைப்பதற்கு உயர் அதிகாரிகளிடம் கேட்க வேண்டும் எனவும், அவர்களின் உத்தரவு இருந்தால் தான் நாங்கள் கூண்டு வைப்போம் எனவும் அலட்சிய பதில்களும் வருவதாக குற்றம் பொதுமக்கள் சாட்டுகின்றனர்.

கோத்தகிரி பகுதியில் சமீபத்தில் தான் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது, உள்ள காலநிலையில் அதிக அளவு மழை பெய்வதால் பழ வகைகள் பூ பூக்கும் போதே அவை உதிர்ந்து விடுகின்றன.இதனால், பழங்கள் காய்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பிடித்தமான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உலா வர தொடங்கி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.  எனவே, வனத்துறையினர் கோத்தகிரி மற்றும் கிராமப்பகுதிகளில் உலா வரும் கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து மனித-விலங்கு மோதல் ஏற்படும் முன் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்.

The post கோத்தகிரியில் கரடிகளை கூண்டு வைத்து பிடிப்பதில் வனத்துறை அலட்சியம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Gothagiri ,Kotakiri ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்