×

புதுச்சேரி விடுதியில் ரகசிய கேமரா மேலாளர், லைசென்ஸ் உரிமையாளர் அதிரடி கைது

புதுச்சேரி, ஜூலை 16: புதுச்சேரி 100 அடி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ரெசிடென்சியில் உழவர்கரையை சேர்ந்த வாலிபர் தனது தோழியுடன் கடந்த 10ம்தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக் பாயிண்ட்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடித்தார். ரகசிய கேமராவை கழற்றி எடுத்த ஜோடி உடனே அறையை காலி செய்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாபுஜி தலையைிலான போலீசார் ஓட்டலில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ரகசிய கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அறையில் தங்குபவர்களை ஆபாசமாக படம் பிடிக்க ரகசிய கேமரா மறைத்து வைத்தது விசாரணையில் கண்டபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஓட்டல் ஊழியர்களான புதுச்சேரி தேங்காய்திட்டு ஆனந்த் (25), அரியாங்குப்பம் ஓடைவெளி ஆபிரகாம் (22) ஆகியோர் மீது பெண்களை ஆபாசமாக படம் பிடித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து தேடி வந்தனர். ரெசிடென்சியின் மேலாளரான புதுச்சேரி நைனார்மண்டபம், வள்ளலார் நகரில் வசிக்கும் இருதயராஜ் (69), லைசென்ஸ் உரிமையாளரான ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், 2வது குறுக்குத் தெரு இளைய ஆழ்வார் (45) ஆகியோர் உடந்தையாக இருந்தது அம்பலமானது. அவர்களும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு, அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக அவர்களிடம் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்படை தீவிரமாக விசாரித்ததில் பரபரப்பு தகவல்கள் அம்பலமானது. அதாவது விடுதி மேலாளரும், லைசென்ஸ் உரிமையாளரும், தங்களுக்கு தெரியாமலேயே அங்கிருந்த ஊழியர்களில் யாரோ இதை பொருத்தி வயர் இணைப்பை வரவேற்பு அறை பகுதி வரையிலும் கொண்டுவந்து பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது, என கூறியுள்ளனர். இதையடுத்து ரகசிய கேமராவில் வீடியோ பதிவு செய்த நபரை கண்டறிய கடந்த 15 நாட்களில் அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். தற்போது பணியில் உள்ள ஊழியரோ அல்லது வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களில் யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் தலைமறைவு குற்றவாளிகளை பிடித்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதி ஊழியர்களான ஆனந்த், ஆபிரகாம் ஆகிய இருவரையும் தனிப்படை தொடர்ந்து தேடி வருகிறது. இதை தொடர்ந்து புதுச்சேரி நகர பகுதிகளில் உள்ள மற்ற லாட்ஜ்கள், விடுதிகள், தங்கும் ஓட்டல்களில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். கிழக்கு எஸ்பி சுவாதி சிங் மேற்பார்வையில் பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் லாட்ஜ்கள் மற்றும் விடுதிகளில் சோதனை நடத்தி தங்கும் அறைகளில் ஏதேனும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். மேலும் ஓட்டலில் தங்கும் நபர்களின் விவரங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தனர். இதேபோல் உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

The post புதுச்சேரி விடுதியில் ரகசிய கேமரா மேலாளர், லைசென்ஸ் உரிமையாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Inn ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு