×

தேனிக்காரர் அரசியல் மாநாட்டை கைவிட்ட கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூங்கா நகர இலை கட்சி மாநாட்டால் யாருக்கு தூக்கம் போச்சு…’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்தில் விரைவில் சேலத்துக்காரர் அணி சார்பில் இலை கட்சியின் மாநாடு நடக்கிறது. இதற்கான வேலையில இலை கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கி இருக்காங்க. சேலத்துக்காரர் மலைக்கோட்டை மற்றும் டெல்டா ஆதரவாளர்களான மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்களாம். அதாவது, தூங்கா நகர மாநாட்டுல நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் மற்றும் மலைக்கோட்டை மாவட்டங்களில இருந்து நெறைய தொண்டர்கள் பங்கேற்கணும்னு கடல் அலைபோல கூட்டத்தை காட்டி ஒன்றிய மற்றும் பங்காளிகளை அசைக்க செய்யணும். இதனால சேலத்துக்காரர் அணியோட முக்கிய நிர்வாகிகள் களத்துல இறங்கிட்டாங்க. இதற்கிடையில தங்களோட அணியில இருந்து யாரும் அங்க போயிடக் கூடாதுன்னு தேனிக்காரர், குக்கர், சின்ன மம்மி அணிக்காரங்க தங்களின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நெல்லையில் தொல்லை தரும் வன அதிகாரிகளை நினைத்து ரெவின்யூ டிபார்ட்மென்ட் ஆட்கள் ஏன் டென்ஷனாகிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெல்லையில் வனத்துறையால் மாவட்ட நிர்வாகத்தில் ஏகப்பட்ட குழப்பமாம். குறிப்பாக, நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதி முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையால் சூழ்ந்துள்ளது.. இங்கு ஒரு பிரச்னை என்றால் மாவட்ட நிர்வாகம் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எதிரொலிக்கும். அதற்கு பதில் சொல்ல வனத்துறை அதிகாரி கூட்டத்துக்கு வர வேண்டும். ஆனால் வனத்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் என எந்த கூட்டத்தையும் கண்டுகொள்வதில்லையாம். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எம்பி, கலெக்டர் ஆகியோர் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தனர். மாஞ்சோலைக்கு சாலை போட கடந்த அக்டோபர் மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதே, இதுவரை எந்த பணியையும் தொடங்கவில்லையே என எம்பி கேட்க, கலெக்டர் வனத்துறை துணை இயக்குநர் பதில் சொல்லுங்க என்றார். ஆனால், துணை இயக்குநர் மிஸ்ஸிங். மற்றொரு வன அதிகாரி பதில் தெரியாமல் விழிக்க நிலைமையை சமாளித்த கலெக்டர் போனில் கேட்டு பதில் சொல்லுங்க என்றார். ஆனாலும் அந்த துணை இயக்குநர் தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை, அதை கூட்டத்தின் மினிட்டில் பதிவு செய்யுங்க என எம்பியும், கலெக்டரும் அதிரடியாக உத்தரவிட்டாங்களாம். அந்த சின்ன வனத்துறை அதிகாரி தன் மேலதிகாரி மேலேயே தைரியமாக குறிப்பு எழுதிவிட்டு.. இப்போது பயந்துட்டு இருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரரு இனி மண்டல, மாநில மாநாடு நடத்துவதை விட வேறு பிளான் போட்டுள்ளதை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி ரெண்டான நிலையில், சேலத்துக்காரரின் பக்கம் கூட்டம் அதிகமா இருக்காம். தேனிக்காரரிடம் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே ஆட்கள் இருக்காங்க. இதனால எப்படியாவது ஒண்ணாகிடனுமுன்னு வலை விரிச்சு பாத்தாங்களாம். ஆனா, இவங்கள சேர்த்தா சுமை தான், என நினைத்த சேலத்துக்காரர் மறுத்துட்டாராம். ஆகஸ்ட் மாதம் தூங்கா நகரில் மாநாடு நடத்தப் போறதா சேலத்துக்காரர் அறிவிச்சிருக்கார். ஆனா, அதுக்குள்ள ஒரு பிரமாண்டமான மாநாட்டை நடத்திடனுமுன்னு தேனிக்காரர் சைடில் இருந்து முடிவு செஞ்சிருந்தாங்க. அதை மாங்கனி மாநகரில் நடத்தி, சேலத்துக்காரருக்கு அதிர்ச்சி கொடுக்கனும்னு தேனிக்காரர் ஆசைப்பட்டாராம். ஆனால், அதுக்கான செலவை யார் செய்வாங்கன்னு நிர்வாகிகள் கேட்டாங்களாம். புரட்சி மாநாடு, போட்டி மாநாடு என்று கூவியவர்கள் எல்லாம் கையில் கரன்சி இல்லாத காரணத்தால் மாநாடு நடத்த பணம் இல்லை என்று ஒதுங்கிட்டாங்களாம். அப்புறம், தேனிக்காரரை பார்த்து ஐயா உதவி செய்தா சேலத்துல பெரிய மாநாடு நடத்தி இபிஎஸ்சை இல்லாம செய்துடுவோம்னு தூபம் போட்டாங்களாம். ஆனால் கரன்சிக்கு பயந்து யாரும் மாநாட்டை நடத்த முன்வரலையாம். அதே நேரத்தில், தூங்கா நகரத்து மாநாடு பிரமாண்டமாகி, நம்ம மாநாடு பிசுபிசுத்து போச்சுன்னா அரசியல்ல கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரியாதையும் போயிடும் என்று தேனிக்காரர் நினைக்கிறாராம். அதனால சேலம் மாநாடு குறித்து, எந்த திட்டத்தையும் எடுக்காமல் யோசித்துக் கொண்டே இருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விடியும் வரை காத்திரு படம் போல… புதுச்சேரியில ஒருத்தருக்கு நேரம் வரும் வரை காத்திருனு, யாரு டைம் ெகாடுத்திருக்கா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறையை காட்டி பயமுறுத்தி கதர்கட்சியில் இருந்த எம்எல்ஏக்கள் எல்லாம் ஒரே ஜம்பில் தாமரைக்கு தாவினர். இதில் முதலில் மூட்டை கட்டியவர் முழம்குமார்தான். அதன்பிறகு தாமரையில் தனது மகன் விவிலியனை நெல்லிக்காய் தொகுதியில் நிற்க வைத்து எம்எல்ஏவாக்கினார். இதற்கு பரிசாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் கனவு காண, அனைத்துக்கும் இடி விழுந்தது. இதற்கிடையே புதுச்சேரியில் கோயில் சொத்தை போலி பத்திரம் செய்து, தனது உறவுகள் பெயரில் எழுதியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முழம்குமாருக்கு எதிராக பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. அவர் பதவியை பறிக்க வேண்டுமென கூக்குரல் இடுகின்றனர். பவர்புல் பெண்மணியிடம், தன்னை காக்குமாறு காலில் விழ, வாசல் பக்கம் கையை காட்டி கிளம்பச்சொல்லிட்டாராம். தாமரை எம்எல்ஏவாக இருந்தும், யாரும் தன்னை காப்பாற்றவில்லையென்ற விரக்தி மேலிட, தாமரைக்கு விடை கொடுத்து, கதர் பக்கம் முழம்குமாரின் காற்று வீச ஆரம்பித்துள்ளதாம். இதற்கு மஞ்சள் நிற சட்டை அணிந்திருக்கும் ஒருவர் மூலம் காங்கிரசின் முன்னாளுக்கு தூதுவிட்டிருக்கிறாராம். ஆளும் அரசு, சிபிசிஐடி மூலம் ஒரு பக்கம் நெருக்குகிறது. மற்றொரு பக்கம் தாமரை கை கழுவிவிட்டது என தகப்பன் சாமியிடம் தஞ்சம் அடைய தயார் எனக்கூறி அனுப்பினாராம். நான் செய்த அனைத்துக்கும் பாவ மன்னிப்பு கோருகிறேன். அதற்காக எனது மகன் வைத்திருக்கும் நெல்லிக்கனியை உங்களுக்கு பரிசாக தருகிறேன்னு சொன்னாராம். அதற்கு இப்போதைக்கு காத்திரு.. நேரம் வரும் பார்த்திரு… உனக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கும் என்றாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனிக்காரர் அரசியல் மாநாட்டை கைவிட்ட கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thenikar ,Toonga City Leaf ,Party ,Conference ,Peter ,Dunga ,Yananda ,
× RELATED நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை...