×

கடற்படைக்கு தேவையான 26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது: டசால்ட் நிறுவனம் அறிவிப்பு

பாரிஸ்: இந்திய கடற்படைக்கு தேவையான 26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்துள்ளது என்று டசால்ட் விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. பிரதமர் மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய கடற்படைக்கு தேவையான 26 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 3 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இவற்றை கொள்முதல் செய்வதற்கு கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளத்தது. ஆனால் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் நடந்த சந்திப்பு மற்றும் ஒப்பந்தத்தில் இதுபற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நேற்று டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இதுபற்றிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: இந்திய கடற்படைக்கு நவீன தலைமுறை தேவையாக ரபேல் போர் விமானங்களை இந்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்போது ரபேல் எம் ரக விமானம் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளை முழுமையாகப் பூர்த்திசெய்தது. மேலும் விமானம் தாங்கி கப்பலின் பிரத்தியேகங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை ரபேல் நிரூபித்தது. இந்திய கடற்படையில் புதிதாக 26 ரபேல் போர் விமானங்கள் இணைய உள்ளன. ஏற்கனவே சேவையில் உள்ள 36 ரபேல் விமானங்களுடன் இந்த 26 விமானங்களும்இணைகிறது. இது இந்திய விமானப்படைக்கு முழு திருப்தி அளிக்கிறது. இதன் மூலம் விமானப்படை, கடற்படை இரண்டிலும் ரபேல் போர் விமானங்களை இயக்குவதில் பிரான்சைப்போல் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. காற்று மண்டலத்திலும் மற்றும் கடல் மட்டத்திலும் இந்தியாவின் இறையாண்மைக்கு ரபேல் விமானங்கள் உத்தரவாதம் வழங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் நிலைநிறுத்துவதற்காக இந்தியா ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது.
* மொத்தம் 26 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது.

The post கடற்படைக்கு தேவையான 26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது: டசால்ட் நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Navy ,DASSALT ,Paris ,Indian Navy ,Duschalt Airlines ,Dusalt Company ,
× RELATED கண்ணமங்கலம் அருகே மலையடிவாரத்தில் 2...