×

குடிசை மேம்பாட்டு திட்டம் அதானி நிறுவனத்திடம் தாராவி ஒப்படைப்பு: மகாராஷ்டிரா அரசு செயலால் தமிழர்கள் அச்சம்

மும்பை: மும்பை தாராவி குடிசை மேம்பாட்டு திட்ட ஒப்பந்தத்திற்கு அதானி நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் வணிக தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசியாவிலேயே அதிக குடிசைகளை கொண்ட பகுதியாக அறியப்படும் தாராவி உள்ளது. இங்குள்ள குடிசைகளை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 259 ஹெக்டேர் பரப்பு கொண்ட தாராவி குடிசை மேம்பாட்டு திட்டமானது ரூ.20ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்துக்கு அதானி நிறுவனம் ரூ.5069கோடியை முதலீடு செய்கிறது. இந்த திட்டப்பணிகளை தொடங்குவதற்கு அதானி குழுமத்துக்கு அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் உள்ளூர் வணிகங்களை நம்பியுள்ள ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அரசு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். வாடகை பணத்தை கொண்டு அவர்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவைகள் இடிக்கப்பட்டால் உரிமையாளருக்கு மட்டும் ஒரு பிளாட் மட்டுமே ஒதுக்கப்படும். அவர்கள் என்ன செய்வார்கள்? அது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. இந்த பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. உண்மையிலேயே அரசு தாராவியை மறுசீரமைக்க விரும்பினால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கணக்கெடுப்பின் கடைசி நாள் தேதியானது தகுதிக்கான தேதியாக இருக்க வேண்டும். 2000த்துக்கும் மேற்பட்டோர் இட்லி விற்பனை செய்கிறார்கள்.

முழு நகரத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். மறுசீரமைப்புக்கு பின் இதுபோன்ற வணிகங்கள் இருக்காது. தோல் மற்றும் கவரிங் நகை தயாரிப்பில் ஈடுபடுள்ள சிறு தொழில்கள் முடங்கும்” என தெரிவித்துள்ளனர். தாராவிக்கும், தமிழர்களுக்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலான பந்தம் உள்ளது. தென் தமிழகத்தில் இருந்து தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்தனர். இங்குள்ள மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் தமிழர்கள். எனவே அதானி நிறுவனம் பணிகளை தொடங்கும் போது பெரும்பாலும் தமிழ்நாட்டு மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் இடம்பெயர வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

* அதானிக்கு மகாராஷ்டிரா அரசின் பரிசு
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி மாநில அரசுகளை எப்படி தங்களது கூட்டாளிகளுக்கு ஏடிஎம் இயந்திரமாக மாற்றியுள்ளார் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு இது. பிரதமர் மோடியின் கூட்டாளிக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கும் பரிசு தான் தாராவி திட்டம். மும்பையின் குடிசைவாசிகளின் நிலமும், வாழ்வாதாரமும் கூட மோதானியின் மெகா ஊழலால் விட்டுவைக்கப்படவில்லை” என்றார்.

The post குடிசை மேம்பாட்டு திட்டம் அதானி நிறுவனத்திடம் தாராவி ஒப்படைப்பு: மகாராஷ்டிரா அரசு செயலால் தமிழர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Dharavi ,Adani ,Maharashtra Govt. ,MUMBAI ,Maharashtra government ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...