×

ஜூலை 18ல் ஆலோசனை சிராக் பஸ்வானுக்கு பா.ஜ அழைப்பு

புதுடெல்லி: வரும் 18ம் தேதி நடைபெறும் பா.ஜ கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும்படி சிராக் பஸ்வானுக்கு பா.ஜ அழைப்பு விடுத்துள்ளது. 2024மக்களவை தேர்தலில் பா.ஜவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த கட்சிகளின் 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த நிலையில் ஜூலை 18ம் தேதி பா.ஜவும் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

இதற்காக அனைத்து கூட்டணிகட்சிகளுக்கும் பா.ஜ அழைப்பு விடுத்து வருகிறது. பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி(ராம்விலாஸ்) கட்சிக்கும் பா.ஜ அழைப்பு விடுத்துள்ளது. அவரது சித்தப்பா பசுபதி குமார் ஏற்கனவே பா.ஜ கூட்டணியில் உள்ளார். அவர் சிராக் பஸ்வானை லோக்ஜனசக்தி கட்சியில் இருந்து நீக்கி விட்டார். எனவே தனிக்கட்சி நடத்தி வரும் சிராக் பஸ்வானுக்கும் பா.ஜ தற்போது அழைப்பு விடுத்துள்ளது. பா.ஜ தலைவர் ஜேபி நட்டா இதற்கான கடிதத்தை சிராக் பஸ்வானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் நித்தியானந்த ராய், சிராக் பஸ்வானை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார். மேலும் பீகாரில் ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சிக்கும் பா.ஜ அழைப்பு விடுத்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவு படுத்தி மகாராஷ்டிரா அரசின் துணை முதல்வர் பதவி பெற்றுள்ள அஜித் பவார், பீகார், உபியில் உள்ள சிறிய கட்சிகள் பலவற்றிக்கும் பா.ஜ அழைப்பு விடுத்துள்ளது.

* மோடியை சந்திக்கிறார் அஜித்பவார்
மகாராஷ்டிரா அரசியலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பா.ஜ கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவி பெற்ற அஜித் பவார் ஜூலை 18ல் நடக்கும் பா.ஜ கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதுபற்றி நாசிக்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், “தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாளை மறுதினம்(ஜூலை 18) பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அப்போது மகாராஷ்டிர மாநில விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறுவேன். டெல்லியில் நாளை மறுதினம் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் நானும், பிரபுல் படேலும் கலந்து கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்தார்.

* சரத்பவார் வீட்டிற்கு சென்ற அஜித்பவார்
தேசியவாத காங்கிரசை பிளவுபடுத்திய பின்னர் முதன் முதலாக சரத் பவாரின் வீட்டிற்கு அஜித் பவார் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரத் பவாரின் மனைவி பிரதிபாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பியதால், அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அஜித் பவார் சரத் பவார் வீட்டுக்குச் சென்றார் என்று சொல்லப்படுகிறது.

The post ஜூலை 18ல் ஆலோசனை சிராக் பஸ்வானுக்கு பா.ஜ அழைப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chirag Paswan ,New Delhi ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...