×

இன்னிங்ஸ், 141 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. விண்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுக தொடக்கவீரர் ஜெய்ஸ்வால் 171, கேப்டன் ரோகித் 103, கோஹ்லி 76, ஜடேஜா 37* ரன் விளாசினர். அடுத்து 271 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அஷ்வின் சுழல் ஜாலத்தை சமாளிக்க முடியாமல் 50.3 ஓவரில் 130 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அஷ்வின் 21.3 ஓவரில் 7 மெய்டன் உள்பட 71 ரன்னுக்கு 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஜடேஜா 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2 இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட் கைப்பற்றிய அஷ்வின் பல்வேறு சாதனைகளை வசப்படுத்தினார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது.

* ஒரு டெஸ்டின் 2 இன்னிங்சிலும் 5 விக்கெட் கைப்பற்றிய சாதனையாளர்கள் பட்டியலில் அஷ்வின் (6 முறை) 4வது இடம் பிடித்துள்ளார். முரளிதரன் (11முறை), ரங்கனா ஹெராத் (8), சிட்னி பர்னஸ் (6) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
* வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா டெஸ்ட் மோதலில் அதிக விக்கெட் அள்ளியவர்கள் (டாப் 5): 1.கபில் தேவ் (89), 2.மால்கம் மார்ஷல் (76), 3.அனில் கும்ப்ளே (74), 4.அஷ்வின் (72), 5.வெங்கட்ராகவன் (68).
* இந்தியாவுக்காக டெஸ்ட்களில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தவர்கள்: 1.அனில் கும்ப்ளே (8 முறை), 2.அஷ்வின் (8 முறை), 3.ஹர்பஜன் சிங் (5 முறை).
* ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையை அஷ்வின் 34வது முறையாக நிகழ்த்தியுள்ளார். இந்திய பவுலர்களில் கும்ப்ளேவுக்கு (35 முறை) அடுத்து 2வது இடத்தில் அஷ்வின் உள்ளார்.
* அறிமுக டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற 8வது இந்திய வீரர் என்ற பெருமை ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது.

The post இன்னிங்ஸ், 141 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,Dominica ,West Indies ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!