×

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள 186 எச்ஐவி பரிசோதனை மையங்களை மூட ஒன்றிய அரசு திட்டம்: விரைவில் 82 மையங்கள் மூடப்படுகிறது

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள 186 எச்ஐவி பரிசோதனை மையங்களை மூட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 82 பரிசோதனை மையங்கள் விரைவில் மூடப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 5081 எச்ஐவி பரிசோதனை மையங்கள் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மையங்களை தனியார் மயமாக்கும் வகையில் ஒன்றிய அரசு முடிவு செய்து மொத்தமுள்ள பரிசோதனை மையங்களிலிருந்து பாதியாக குறைக்கும் வகையில் முதற்கட்டமாக 593 மையங்களை மூட முடிவு செய்துள்ளது. மேலும், 2119 பரிசோதனை மையங்களின் செயல்பாடுகள் 6 மாதங்களுக்கு கண்காணிக்கப்படும். அதன் செயல்பாடுகளை பொறுத்தே மூடப்படும் என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் பரிசோதனை மையங்களை ஊக்கப்படுத்தும் வகையில் மீதமுள்ள 2119 அரசு பரிசோதனை மையங்களை மூட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனிடையே தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 377 எச்ஐவி பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்கள் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன. இதில், சென்னையில் 15 பரிசோதனை மையங்கள், திருவள்ளூரில் 11 பரிசோதனை மையங்கள், செங்கல்பட்டில் 2 பரிசோதனை மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 186 எச்ஐவி பரிசோதனை மையங்களை மூட வேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் எச்ஐவி பரிசோதனை மையங்கள் மூடப்படுமானால் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முடங்கும். தற்பொழுது தமிழகத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் கட்டாய எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் 100% கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் எச்ஐவி பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூடினால் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் எச்ஐவி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், இந்த மையங்களில் அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு வரும் நோயாளிகளுக்கு கட்டாயம் எச்ஐவி பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நம்பிக்கை மையங்களை மூடினால் நோயாளிகள் கடுமையாக பாதிப்படைவார்கள். அதேபோல் எச்ஐவியால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஏ.ஆர்.டி கூட்டு மருந்து வழங்க அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகளில் 55 ஏ.ஆர்.டி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இலவசமாக ரத்த பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏ.ஆர்.டி மையங்களை துவக்க ஒன்றிய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது. இதுவரை 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏ.ஆர்.டி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவ கல்லூரியில் செயல்படும் ஏ.ஆர்.டி மையங்களுக்கு எச்ஐவி நோயாளிகளை அனுப்பி வைக்க அரசு மருத்துவ கல்லூரி ஏ.ஆர்.டி மைய மருத்துவர் மற்றும் ஆலோசகர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் செயல்படும் ஏ.ஆர்.டி மையங்களில் ஏ.ஆர்.டி மாத்திரை மட்டும் தற்பொழுது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ரத்த பரிசோதனைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பறித்து வருகின்றனர். எதிர்காலத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி மாத்திரைகளும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அபாயம் உள்ளது. இதனால் ஏழை எளிய நோயாளிகள் பணம் கொடுத்து மருந்து வாங்க முடியாமல் மரணம் அடையும் நிலை ஏற்படும் என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், எச்ஐவி பரிசோதனை மையங்களை குறைத்தால் தமிழகத்தில் எச்ஐவி தொற்று பரவும் விகிதம் மீண்டும் அதிகரிக்கும். ஏ.ஆர்.டி மையங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் தொடங்கினால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை கிடைப்பதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எச்ஐவி பரிசோதனை மையங்களை குறைக்கும் முடிவையும், ஏ.ஆர்.டி தனியார்மயமாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள 186 எச்ஐவி பரிசோதனை மையங்களை மூட ஒன்றிய அரசு திட்டம்: விரைவில் 82 மையங்கள் மூடப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu ,government ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...