×

உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் 2022ல் பட்டினியால் வாடியது 78.3 கோடி பேர்: ஐ.நா அறிக்கையில் தகவல்

நியூயார்க்: உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் 2022ல் 78.3 கோடி பேர் பட்டினியால் வாடியதாக ஐ.நா ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பேசப்பட்டாலும், மறுபுறம் உலகெங்கிலும் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இதுபோன்ற பாகுபாடானது சமச்சீரற்ற மற்றும் சமமற்ற வளர்ச்சியின் குறிகாட்டியாகும். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு (உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை அறிக்கை – 2023) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டு 2.4 பில்லியன் (250 கோடி) மக்கள் தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. 783 மில்லியன் (78.3 கோடி) மக்கள் பட்டினி கிடந்தனர்.

இதே காலகட்டத்தில் 14.8 கோடி குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு வகையான ஸ்திரமற்ற பொருளாதார தன்மையை எதிர்கொண்டன. ஏற்கனவே பொருளாதார ரீதியாக வலுவாக இருந்த நாடுகள், கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன, ஆனால் மேற்கு ஆசியா, கரீபியன், ஆப்பிரிக்காவின் பல நாடுகளின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. மேலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரினால் உணவு தானிய விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, பல நாடுகளில் வானிலை சீரற்றதாகவும், சில நேரங்களில் எதிர்மாறாகவும் இருந்தது.

இதற்கிடையில், இந்தியாவில் எண்பது கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. ஆனால் பிரச்னை என்னவென்றால், வளங்களின் சமத்துவமின்மையின் பிரச்னையால், பல நாடுகளில் மக்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் வாழ்வதற்கான குறைந்தபட்ச உணவைக் கூட பெறமுடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து உணவு கிடைக்காமல் பலர் பட்டினியால் வாடும் நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்னையை சமாளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’ என்று தெரிவித்துள்ளது.

The post உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் 2022ல் பட்டினியால் வாடியது 78.3 கோடி பேர்: ஐ.நா அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : global economic crisis ,I.S. Na ,New York ,Na ,I. Na ,Dinakaran ,
× RELATED 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கார்: அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் பலி