×

டெல்லி யமுனை ஆற்றில் நீர் மட்டம் குறைய தொடங்கிய போதிலும் பல இடங்களில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு..!!

டெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றில் நீர் மட்டம் குறைய தொடங்கிய போதிலும் பல இடங்களில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கொட்டிய இடைவிடாத கனமழையால் அக்நிக்குந் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் யமுனை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளை மூழ்கடித்தது.

முக்கிய அலுவலகங்கள் அமைந்திருக்கும் ஐ.டி.ஓ செங்கோட்டை, காஷ்மீர் கேட், சிவில் லைன்ஸ் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள சுரங்க பாலத்தில் 2வது நாளாக வெள்ளம் வடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முகந்பூர் பகுதியில் ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இது துருதிஷ்டவசமானது என்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விஷயத்தில் யார் மீதும் பழிசுமத்துவதற்கு பதிலாக இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டு கொண்டார். இதனிடையே வெள்ளத்தில் சிக்கி தவித்த தெருநாய்களை தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டு காப்பகங்களுக்கு எடுத்து சென்றனர். அதே போல உத்தரபிரதேசத்தில் நொய்டாவில் கிரீன் பியூட்டி பாம்ஸ் வளாகமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

அந்த குடியிருப்புகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் இடுப்பளவு தண்ணீரில் படகுகளில் மூலம் மீட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தின் சிலிகுரி மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் சாலைகள் குளங்களாக மாறின. அசாம், மேகாலயா எல்லையில் உள்ள ஜோராபாத் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பீகார் தலைநகர் பாட்னாவில் சட்டசபை வளாகம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சட்டசபை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை ஊழியர்கள் வாகனங்களில் மோட்டார் பொருத்தி வெளியேற்றினர். இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

The post டெல்லி யமுனை ஆற்றில் நீர் மட்டம் குறைய தொடங்கிய போதிலும் பல இடங்களில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Yamunai river ,Delhi ,Yamunai river ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...