×

நாகப்பட்டினம், தலைஞாயிறில் 17ம்தேதி வரை தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் வீடுதோறும் நேரடி கள ஆய்வு

*கலெக்டர் தகவல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம், தலைஞாயிறில் வரும் 17ம்தேதி வரை தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடக்கிறது. இதையொட்டி வீடுதோறும் நேரடி கள ஆய்வு நடக்கிறது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார்.அப்போது அவர் பேசியதாவது:

தொழுநோய் அல்லது குஷ்டம் என்ற நோய் உலகின் மிகப் பழமையான நோயாகும். மக்களுக்கு உடல்ரீதியாக மட்டுமில்லாமல், மனரீதியாகவும், மிக்க பயத்தையும், கலங்கத்தையும், ஒரு பாகுபாட்டையும் அளிக்கும் நோயாக உள்ளது. இந்நோய் முற்றிலும் குணமாக கூடியது. அவர்களை ஒதுக்க கூடாது. சிகிச்சை பெறாத, தொற்றும் வகையை சேர்ந்த ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் அதிகமான கிருமிகள் வெளியாகி காற்றின் மூலம் பரவுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற கிருமியினால் வருகிறது.

ஆண், பெண், பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் இந்த நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது. நோயின் அறிகுறிகள் சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற அரிப்பில்லாத தேமல். நரம்புகள் தடித்து செயலிழந்து இருத்தல், கை கால்களில் வலி இல்லாத புண்கள் இருத்தல், மைக்கோ பாக்டீரியம் லேப்ரே என்ற கிருமி உடலில் இருப்பதை உறுதி செய்கிறது. தோல் பரிசோதனை மூலம் நிரூபணம் செய்தல் போன்றவைகளாகும்.

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீடு தோறும் வருகை புரியும் களப்பணியாளர்களிடம் பரிசோதித்து கொள்ள வேண்டும். அல்லது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம். மற்றபடி இந்நோய் பாவத்தால், சாபத்தால் தவறான நடத்தையால், சில பூச்சி கடிகள் போன்றவற்றால் வருவதில்லை. குறைந்த கிருமி தொற்று உடையவர்கள் 6 மாதங்களுக்கும், அதிக கிருமி தொற்று உடையவர்கள் 12 மாதங்களும் சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப நிலை கூட்டு மருந்து சிகிச்சை உடல் ஊனத்தை தடுக்கும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொழுநோய் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது, கூட்டு மருந்து சிகிச்சை தொடங்குவதற்கு முன்னர் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு 98 பேருக்கு நோய் இருந்தது. தற்போது ஜனவரி 2023 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு 0.17க்கும் குறைவாக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது 17 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் குறைந்த கிருமி தொற்று உடையவர்கள் மூன்று பேர். அதிக கிருமி தொற்று உடையவர்கள் 14 பேர். உடல் ஊனமுற்றவர்கள் ஒரு நபர் உள்ளார்கள். தொழுநோய் ஊன பராமரிப்பு உதவி தொகை ரூ.2 ஆயிரம்- மாதந்தோறும் வாழ்நாள் முழுக்க வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தை தொழுநோய் இல்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையின் சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் 17ம் தேதி வரை நேரடி கள ஆய்வு தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நாகப்பட்டினம் மற்றும் தலைஞாயிறு வட்டாரத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தொழுநோய் கண்டுபிடிப்பு குறித்து பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள் வீடு தோறும் வருகை புரிந்து தொழுநோய் கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை பணி மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய தொழுநோய் நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை பெற பரிந்துரை செய்ய உள்ளார்கள். எனவே அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், சார் ஆட்சியர் பானோத்ம்ருகேந்தர்லால், துணை இயக்குநர் (தொழுநோய்) சங்கரி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) விஜயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம், தலைஞாயிறில் 17ம்தேதி வரை தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் வீடுதோறும் நேரடி கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam, Thalai ,Leprosy Detection Camp ,Nagapattinam ,Leprosy ,Dinakaran ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்