×

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகில் நடைமேம்பாலம் அமைக்க அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகில் நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன், ரயில்வே அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெருக்கடி தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் தொழில் சம்பந்தமாக இங்கு வந்து செல்வோர் போன்றவற்றால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து தற்போது மேலூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் ரயில் தண்டவாளத்தை கடக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதால் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே மேலூர் ரயில்நிலையம் அருகில் இருந்து அதன் எதிர் பகுதிக்கு செல்ல வசதியாக ரயில் நடை மேம்பாலம் அமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு செல்வநாயகபுரம், ஆண்டாள் தெரு சந்திக்கும் பகுதியிலிருந்து ஏறி, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, ரஹ்மத்துல்லாபுரம் பகுதியில் இறங்கும் வகையில் ரயில்வே கிராசிங் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து நேற்று ரயில்வே கோட்ட பொறியாளர் முத்துகுமாருடன், அமைச்சர் கீதாஜீவன் ரயில்வே நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ‘பயணிகள் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த பகுதியில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்கவும் மாணவ ,மாணவியர், பெண்கள், வியாபாரிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதற்காக ரயில்வே துறைக்கு எம்.பிக்கள் கனிமொழி, வில்சன், கல்யாணசுந்தரம், அப்துல்லா ஆகியோர் நிதியிலும் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியையும் சேர்த்து வழங்குவதாக உறுதியளித்துள்ளோம்’ என்றார்.

ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், வருவாய்த்துறை ரம்யா தேவி, நில அளவைபிரிவு சார் ஆய்வாளர் சக்திவேல், திமுக மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், கவுன்சிலர் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, வட்ட செயலாளர்கள் செல்வமாரியப்பன், பாலகுருசாமி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், பிரம்மநாயகம், ஆனந்தன், அந்தோணி முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகில் நடைமேம்பாலம் அமைக்க அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Getajivan ,Thoothukudi ,Keetajivan ,Thoothukudi Mailur Railway Station ,Thoothukudi Melore ,station ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...