×

திருப்பதியில் 2ம் நாள் விழா கோலாகலம் கோதண்டராமர் கோயிலில் பவித்திர மாலைகள் சமர்ப்பணம்

*திரளான பக்தர்கள் திரிசனம்

திருமலை : திருப்பதியில் 2ம் நாளாக கோதண்டராமர் கோயிலில் பவித்திர மாலைகள் சமர்ப்பணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோதண்டராமர் கோயிலில் பவித்திர உற்சவத்தின் 2ம் நாளான நேற்று பவித்திர மாலைகள் சமர்ப்பணம் நடந்தது. இதையொட்டி காலை தோமாலை சேவை, சஹஸ்ரநாமர்ச்சனை உள்ளிட்ட நித்ய நடந்தது. பின்னர் சீதா லட்சுமணர், ராமர் உற்சவர்களை யாகசாலைக்கு கொண்டு வந்து அங்கு விஷ்வசேனாதிபதி பூஜை, கும்ப ஆராதனை, யாகம் ஆகியவை நடைபெற்றன.

பின்னர் உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இள நீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், யாகசாலையில் வைக்கப்பட்ட பவித்திர மாலைகள் துருவமூர்த்தி, கவுதுகமூர்த்தி, ஸ்நாபனமூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. மேலும், கோயில் முன்புறம் உள்ள விஷ்வசேனாதிபதி, துவார பாலகர்கள், பாஷ்யகர்ல சன்னதி, கருடாழ்வார், பலிபீடம், கொடிமரம், கோயில் எதிரே உள்ள ஆஞ்சநேய சுவாமி சன்னதியில் பவித்திர மாலைகள் சமர்பிக்கப்பட்டது.

மாலையில் சீதா ராமர் லக்ஷ்மணர் கோயில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் துணை இஓ நாகரத்னா, ஏ.இ.ஓ.பார்த்தசாரதி, வைகானச ஆகம ஆலோசகர் மோகனரங்கச்சார்யுலு, கங்கணப்பட்டர் ஆனந்தகுமார தீட்சிதுலு, கண்காணிப்பாளர் ரமேஷ், கோயில் ஆய்வாளர்கள் சலபதி, சுரேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் 2ம் நாள் விழா கோலாகலம் கோதண்டராமர் கோயிலில் பவித்திர மாலைகள் சமர்ப்பணம் appeared first on Dinakaran.

Tags : Tirupathi, Gothandaramar Temple ,Gothandaramar ,Thirisanam Tirumalai ,Tirupathi ,Godandaramar Temple ,Tirupati ,Gothandaramar Temple ,
× RELATED தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் மீட்கப்பட்ட இலங்கை மூதாட்டி சாவு