×

திருமுர்த்திமலை – குருமலை வரை சாலை வசதி 200 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் மலை வாழ் மக்களின் போராட்டம் வாபஸ்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கடந்த 3 நாட்களாக நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் காரணமாக திருமூர்த்தி மலை ரோட்டில் இருந்து குருமலை செட்டில்மென்ட் பகுதி வரை சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என கலெக்டர் உறுதி அளித்ததன் பேரில் மலைவாழ் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

உடுமலையில் உள்ள மலை பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மலை கிராமங்களுக்கு செல்ல சாலை அமைக்க வேண்டும். ஆறுகளை கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டும், குடிநீர், செல்போன் கோபுரம், சமுதாயக்கூடம், பள்ளி, அங்கன்வாடி, ரேஷன் கடை, மருத்துவமனை, வீடு, வேளாண்மை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் உடுமலையில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு கடந்த 12ம் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு கடந்த 2 நாட்களாக அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர். பின்னர் இரவு அங்கேயே படுத்து தூங்கினர். இந்நிலையில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மதுசூதனன், குமார் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டருடனான பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். போராட்ட குழு தரப்பில் மாநில தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் மதுசூதனன், குமார், மலைவாழ் மக்கள் சங்க மாநில துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் திருமுர்த்திமலை ரோடு முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை ரோடு அமைத்து தரப்படும் எனவும், உடனடியாக வன உரிமைக்குழு கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி தரப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் உறுதியளித்தார். தொடர்ந்து மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடத்தி இது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தைக்கு வந்த போராட்டக்காரர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில்:

வன உரிமை சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. 15 ஆண்டுகளும் தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மெத்தன போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக சமூக உரிமைகள் பெறும்பாலும் தமிழ்நாட்டில் வழங்கப்படுவதில்லை. கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருமூர்த்திமலை மற்றும் அதனை சுற்றியுள்ள செட்டில்மெண்ட் பகுதிகளுக்கு வன உரிமை சட்டப்படி உள்ள சமூக உரிமைகளை வழங்க கோரி போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வன உரிமை சட்டம் மக்களுக்கு என்ன உரிமைகள் கொடுத்திருக்கின்றதோ அது மக்களுக்கு முழுமையாக போய் சேர வேண்டுமென என்ற நோக்கில் பேசினார். திருமுர்த்திமலையிலிருந்து குருமலை வரை சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் வனத்துறை ஒப்புதல் வழங்காமல் இருந்தது. இதனால் கடந்த 7 மாதமாக சாலை பணி தொடங்க முடியாமல் இருந்தது.

ஆனால் வன உரிமைக்குழு கூட்டத்தில் உடனடியாக சாலைப்பணி தொடங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அது மிக மகிழ்ச்சியளிக்கிறது. 200 ஆண்டுகளாக தீராத ஒரு பிரச்னை, சுதந்திரம் பெற்றும் தீராத பிரச்னைக்கு தீர்வு எட்டியுள்ளது. திருமூர்த்தி மலையிலிருந்து மக்கள் இனிமேல் சாலையில் பயணிப்பார்கள் என்பது வரலாற்றுத்துவம் வாய்ந்தது. எங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வருகிறது. இவ்வாறு கூறினார்.

நேற்று மாலை வெகுநேரமானதால் மலைக்கிராம மக்கள் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த காட்டில் பயணித்து தங்களது மலைக்கிராமங்களுக்கு செல்லவில்லை. இதனால் 3வது நாளாக நேற்றும் உடுமலையிலேயே தங்கினர்.போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்ற மலைகிராம மக்கள் இன்று காலை தங்களது சொந்த கிராமங்களுக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர்.

The post திருமுர்த்திமலை – குருமலை வரை சாலை வசதி 200 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் மலை வாழ் மக்களின் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Tirumurthimalai ,Kurumalai ,Tirupur ,Udumalai ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...