×

தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 22-வது சட்ட ஆணையத்திடம் பா.ம.க. சார்பில் கருத்துகளை அன்புமணி ராமதாஸ் சமர்ப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த ஒரு மதத்தினர் உரிமைகளும் பறிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு மதப் பிரிவினரின் பாரம்பரியத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும். பல்வேறு மதப் பிரிவினரின் சிவில் உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கவே பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் இந்தியாவின் அடையாளம் பன்முகத்தன்மை சிதைந்து விடும்.

பொது சிவில் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என திமுக, அதிமுக ஏற்கனவே தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. திமுக எம்.பி.க்கள் கூட்டத்திலும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 18-ம் தேதி நடைபெறும் தே.ஜ.கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு பா.ம.க.வுக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவை தொடர்ந்து பா.ம.க.வும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Bamaka ,Annpurani Ramadas ,Chennai ,Bambaka ,Anbaramani Ramadas ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...