×

தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளையடித்த 2 பேர் கைது

*₹48 ஆயிரம், 81 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

திண்டிவனம் : திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களை குறி வைத்து, ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவின் பேரில், திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான ஜனார்த்தனன், தீபன்குமார், பூபால் செந்தில், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார், கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை தனிப்படை போலீசார், திண்டிவனம் வந்தவாசி சாலை வெள்ளிமேடு பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்து வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை சோதனை செய்தனர். சோதனையின் போது பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், திண்டுக்கல் மாவட்டம் புகையிலை பட்டி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் ஆபேல்(32), வேலூர் மாவட்டம் கோணவ வட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஜாபுதீன் மகன் முதர்ஷீர்(38), என்பதும், இவர்கள் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 48 ஆயிரம் ரூபாய் பணம், 81 ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லிஸ்ட் தயார் செய்து கைவரிசை

ஆபேஸ் என்பவர் திண்டிவனம் பகுதிகளில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடும் பொழுது அனைத்து சிசிடிவி காட்சிகளிலும் ஒரே சட்டை அணிந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பகுதியாக லிஸ்ட் தயார் செய்து கொண்டு, ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாதவர்களை நோட்டமிட்டு நூதன முறையில் பணம் கொள்ளையடித்து வந்ததும், தொடர்ந்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்தது.

The post தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளையடித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ambalam ,Kandivana ,Silvermad Hat ,Tamil ,Nadu ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...