×

ஊழியரின் தலையில் பதிந்த ஆணி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்: ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சென்னை: தனியார் கம்பெனியில் பணியில் இருந்தபோது, ஊழியரின் பின் தலையில் பதிந்த ஆணியை, அறுவை சிகிச்சையின் மூலம் எந்தவித பாதிப்பும் இன்றி ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்தவர் பிரம்மா (23). இவர், சென்னை நாவலூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கம்பெனியில் பணியில் இருந்தபோது, பிரம்மாவின் தலையில் ஏதோ ஒன்று வேகமாக பட்டு, ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வலியால் துடித்த பிரம்மாவை, சக ஊழியர்கள் வந்து பார்த்தபோது தொழிலக பயன்பாட்டிற்கான நைல்கன் என்னும் துப்பாக்கியில் இருந்து 2 அங்குலம் நீளமுள்ள ஒரு ஆணி எதிர்பாராத விதமாக பிரம்மாவின் தலையின் பின்புறத்தில் பதிந்துள்ளது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரம்மாவின் கைகள், கால்களில் எந்த பலவீனமும் வெளிப்படவில்லை. அவருக்கு ரத்த அழுத்தமும், நாடி துடிப்பும், இயல்பான அளவிலேயே இருந்தன. தலையின் பின்பகுதியில் பதிந்திருந்த ஆணி அருகில் நகராமல் தடுப்பதற்காக, ஒரு கடினமான காலரை பயன்படுத்தி அவரது கழுத்து அசையாதவாறு செய்யப்பட்டு, பல துறைகளை சேர்ந்த அனுபவம் மிக்க நிபுணர்கள் குழு மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து ஆணி அப்புறப்படுத்தப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தற்போது முற்றிலும் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள பிரம்மா தனது வழக்கமான பணிகளையும் செய்ய தொடங்கியுள்ளார். இதுகுறித்து ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அறுவை சிகிச்சை முடிந்த இரண்டாவது நாளன்றே நோயாளி அவரது இயல்பு பணிக்கு திரும்புவதை உறுதி செய்திருக்கின்ற மிக நுட்பமான, சிக்கல் நிறைந்த, உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை, மிக குறைவான நேரத்திற்குள்ளேயே வெற்றிகரமாக செய்திருக்கும் மருத்துவ குழுவினரை எண்ணி பெருமைப்படுகிறேன். திறமையான, அனுபவம் மிக்க மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், இங்கு வழங்கப்படும் சிறந்த சிகிச்சைக்காகவும் ரேலா மருத்துவமனை மிக பிரபலமாக அறியப்படுகிறது. உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ரேலா மருத்துவமனையும் ஒன்று என்பது இத்தகைய சாதனை நிகழ்வுகளின் மூலம் பலமுறை நிரூபணமாகியிருக்கிறது\\” என்றார். பேட்டியின்போது, ரேலா மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் அன்புச்செல்வம் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

The post ஊழியரின் தலையில் பதிந்த ஆணி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்: ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Rela Hospital ,Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?