×

சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்ட வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமில்லை: சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானதல்ல எனக் கூறி நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதாக மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு 3வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ, பரணிகுமார் ஆகியோரும், அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகினர்.

கபில் சிபல் வாதிடும்போது, அமலாக்க துறை சம்மந்தப்பட்ட நபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தலாம். கைது செய்யவோ, காவலில் எடுத்து விசாரிக்கவோ சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் இடமில்லை. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு முரணாக இந்த வழக்கில் அமலாக்க துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என்றார். இரண்டரை நாட்கள் விசாரணைக்கு பிறகு நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில், அமலாக்கத் துறையினருக்கு காவல்துறையினர் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றாலும் கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. தான் அப்பாவி என நிரூபிக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை உள்ளது. அதனால், விசாரணைக்கு தடை ஏற்படுத்த முடியாது. கைதுக்கான காரணங்களை பெற மறுத்து விட்டு, கைதுக்கான காரணங்களை வழங்கவில்லை என்று மேகலா தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.

கைது செய்ய அதிகாரம் உள்ள அமலாக்கத் துறையினர், காவலில் எடுத்து விசாரிப்பதும் அனுமதிக்கத்தக்கதுதான். கீழமை நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை இந்த வழக்கில் புலன் விசாரணை, விசாரணை ஆகியவற்றை தொடரலாம். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்புதான், அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத் துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில் நான் உடன்படுகிறேன். மருத்துவமனை சிகிச்சை பெற்ற காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா, கூடாதா என்பதை பொறுத்தவரை, சட்டப்படி, ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ள முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்.

அதன் பிறகு காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. தற்போது சிகிச்சையில் உள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்ற அமலாக்கத் துறை தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நாளில் காலை முதல் அமலாக்கத் துறையினர் அவர் வீட்டில் இருந்துள்ளனர். கைதுக்கான காரணங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும். அவரது கைது குறித்து சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானதுதான். நீதிமன்ற காவல் சட்டப்படியானது. எனவே, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல.

இந்த அனைத்து அம்சங்களிலும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை ஏற்கிறேன். இந்த தீர்ப்பை தலைமை நீதிபதிக்கு அனுப்புமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் தலைமை நீதிபதி பட்டியலிடுவார். அதன்பின்னர் மேகலாவின் ஆட்கொணர்வு மனு மீதான இறுதி முடிவை அந்த அமர்வே அறிவிக்கும். மேகலாவின் மனு ஏற்கப்பட்டதா அல்லது தள்ளுபடி செய்யப்பட்டதா என்பது குறித்தும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் எந்த தேதியில் இருந்து தொடங்குகிறது என்பது குறித்தும் நீதிபதி நிஷாபானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

The post சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்ட வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமில்லை: சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,3rd ,Justice ,Karthikeyan ,Chennai High Court ,Chennai ,Bharatha ,3rd Judge ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...