×

புழலில் பரபரப்பு வீட்டுமனை பட்டா கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

புழல்: புழல் 23வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 23வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் விரிவாக்கம், சக்திவேல் நகர், தனலட்சுமி நகர் உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வரி, குடிநீர் மற்றும் மின்சார கட்டணம் செலுத்தியும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.

இங்கு ஒருசிலர் அதிகளவில் லஞ்சம் கொடுத்து பட்டா வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில் பலமுறை புகார் அளித்தும், இப்பகுதி மக்களுக்கு இதுவரை பட்டா வழங்குவதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று காலை புழல் 23வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களிடம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், புழல் 23வது வார்டில் நீண்ட காலமாக வசிக்கும் அனைத்து மக்களுக்கும் விரைவில் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய பட்டா வழங்காவிட்டால் பலகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என வலியுறுத்தினர். பின்னர் அதிகாரியின் உறுதியை ஏற்று மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post புழலில் பரபரப்பு வீட்டுமனை பட்டா கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Madhavaram District Collector's office ,Puzhul 23rd Ward ,
× RELATED புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு