ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் அருகில் பழுதடைந்த ஓடு போட்ட கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம் கடந்த 40 வருடங்களுக்கு மேல் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் தலைமையாசிரியர்களின் பணி பதிவேடு பதிவுகள் வழங்கப்படும், தேர்தல் நேரங்களில் தேர்தல் பணி செய்ய ஆர்டர்கள் வழங்குவதும் இந்த அலுவலகத்தில் தான், மேலும் வட்டார கல்வி அலுவலர் தலைமையில் தொடக்கப்பள்ளியின் 103 தலைமையாசிரியர்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் இங்கு நடைபெறும்.
இந்நிலையில் இந்த அலுவலகத்தில், மழைக்காலத்தில் முக்கிய ஆவணங்கள் நனையும் நிலை ஏற்பட்டது. இதனால் வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆகையால் இந்த கல்வி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தலைமையாசிரியர்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்லாபுரம் பிடிஒ அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆகையால் ஏற்கனவே பிடிஒ அலுவலகம் செயல்பட்ட மேல் தளத்தில் வட்டார கல்வி அலுவலகத்தை மாற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி வட்டார கல்வி அலுவலகம் பழைய பிடிஒ அலுவலகத்தின் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர் சாது சுந்தர்சிங் தலைமை தாங்கினார். முன்னதாக வட்டார கல்வி அலுவலர் கல்பனா வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ், பொன்னேரி கல்வி மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் கற்பகம், பிடிஒ நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் எல்லாபுரம் வட்டார கல்வி அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் சத்தியவேலு, தங்கம் முரளி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் செல்வம், செயலாளர் ராஜாஜி, பொருளாளர் ஆனந்தன் மற்றும் தலைமையாசிரியர்கள் ஆறுமுகம், உதயகுமார் உட்பட 53 ஊராட்சிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜாஜி நன்றி கூறினார்.
The post பெரியபாளையத்தில் வட்டார கல்வி அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.