×

மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார்

பாரிஸ்: பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் (பாஸ்டில் தினம்) நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய முப்படையினர் அணிவகுத்து சென்றனர். இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்களும், பிரான்ஸ் நாட்டின் ஜெட் விமானங்களுடன் இணைந்து சாகசம்செய்தன. தேசிய தின கொண்டாட்டத்தில் ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற பாடலுக்கு அணிவகுத்து, 269 பேர் கொண்ட இந்திய முப்படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி ரசித்தார்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது டிவிட்டில்,’இந்தியா, அதன் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்டு, நமது கிரகத்தை அமைதியான, வளமான, நிலையானதாக மாற்ற தேவையான அனைத்தையும் செய்ய உறுதிபூண்டுள்ளது. 140 கோடி இந்தியர்கள் எப்போதும் வலுவான மற்றும் நம்பகமான பங்காளியாக இருப்பதற்காக பிரான்சுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். பிணைப்பு இன்னும் ஆழமாக இருக்கட்டும்! ‘ என குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது டிவிட்டில்,’ உலக வரலாற்றில் ஒரு மாபெரும் பங்குதாரர், ஒரு நண்பர். ஜூலை 14 அணிவகுப்பில் எங்கள் கவுரவ விருந்தினராக இந்தியாவை வரவேற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

முதல் உலகப் போரில் பிரெஞ்சுக்காரர்களுடன் இணைந்து சண்டையிட்ட இந்தியர்களை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.
பிறகு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ என்ற விருதை வழங்கினார். இது ராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் வழங்கப்படும், பிரான்ஸ் அரசின் மிக உயரிய விருதாகும். இவ்விருதை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலில் இந்திய சமூகத்தினரிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியா – பிரான்ஸ் கூட்டாண்மையின் வலுவான அடித்தளம், இருநாட்டு மக்களின் இணைப்பாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சின் பெருமையைக் காக்கும் இந்திய வீரர்கள், தங்கள் கடமையைச் செய்யும்போது பிரான்ஸ் மண்ணில் வீரமரணம் அடைந்தனர். இங்கு போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட், தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறது. ஜனநாயகத்தின் தாயான இந்தியா, பன்முகத்தன்மையின் முன்மாதிரியாக உள்ளது.

இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழி இந்திய மொழியாக இருக்கிறது என்பதை காட்டிலும் பெரிய பெருமை என்ன இருக்க முடியும்? 100க்கும் மேற்பட்ட மொழிகளில் 32,000க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள், 900 செய்தி சேனல்கள் நாட்டில் உள்ளன. ஒன்றாக நடக்க வேண்டும், ஒன்றாக பேச வேண்டும், மனமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது, உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும் என்று இந்தியா கூறிவருகிறது.

பிரான்சில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் தங்குவதற்கான விசா வழங்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் முதல் 10 நாடுகளில், 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 5 டிரில்லியன் பொருளாதார நாடாக இந்தியா மாறுவதற்கு அதிக காலம் தேவைப்படாது. இன்று இதனை உலகம் நம்ப ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் வறுமை ஒழிப்பு தீவிரமாக முடிவுக்கு வந்துள்ளதாக ஐஎம்எப் ஆய்வு கூறுகிறது. இவ்வளவு பெரிய வேலையை இந்தியா செய்யும்போது, ​​அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் நன்மை பயக்கும். இவ்வாறு பேசினார்.

* ரூ.96,000 கோடிக்கு ஒப்பந்தம்
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தில், ​​இந்திய அரசு பிரான்சுடன் 26 ரபேல்-எம் மற்றும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 96 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். மேலும் பிரதமர் மோடியின் இந்த பயணத்தில், பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி துறையில் ஈடுபாடு, தீவிரவாத எதிர்ப்பு, சைபர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச சூரிய கூட்டணி தொடர்பான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்று வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்தன.

* திருவள்ளுவருக்கு பிரான்சில் சிலை
பிரதமர் மோடி பேசும் போது,’ பிரான்சில் உள்ள செர்ஜி மாகாணத்தில் திருவள்ளுவருக்கு மிக விரைவில் சிலை அமைக்கப்படும். இந்தியாவும் பிரான்சும் மிகவும் நெருங்கி விட்டன’ என்றார்.

* தலைவா!
விம்பிள்டன் சமீபத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரை “தலைவா” (தமிழ் வார்த்தை) என்று வர்ணித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதன் மூலம் இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை உலகமும் அனுபவித்து வருகிறது. பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாப்பே இந்தியாவில் அதிகம் பிரபலமானவர். அவர் இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே “சூப்பர்ஹிட்” ஆக உள்ளார் என்று தெரிவித்தார்.

* பிரான்சில் யுபிஐ வசதி அறிமுகம்
பிரதமர் மோடி பேசும் போது,’ புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் கோடி பணத்தை தாய் நாட்டுக்கு பெறுவதன் மூலம், உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. மிக விரைவில் இந்திய பயணிகள் பிரான்ஸ் நாட்டில் யுபிஐயை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் நாட்களில் ஈபிள் டவரில் இருந்து தொடங்கப்படும்’ என்றார்.

* இன்று ஐக்கிய அரபு அமீரகம் பயணம்
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) செல்கிறார். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவரை சந்திக்கிறார். அதன் பிறகு, பிரதமர் மோடிக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும். இருதரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பகேற்கும் பிரதமர் மோடி, இன்று இரவு இந்தியா திரும்பவுள்ளார்.

* மோடிக்கு பரிசு
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நேற்று மார்செல் ப்ரூஸ்ட் எழுதிய ‘இன் சர்ச் ஆஃப் லாஸ்ட் டைம்’ நாவல்களை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார். மேலும் 1916ம் ஆண்டு ஒரு சீக்கிய அதிகாரிக்கு மலர்கள் வழங்கும் புகைப்படம் மற்றும் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சார்லமேனின் செஸ்மேன்களின் பிரதி ஆகியவற்றைப் பரிசாக அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : France ,Modi ,President Emmanuel Macron ,Paris ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...