தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு இன்று காலை வந்த வந்தே பாரத் ரயில்மீது சரமாரி கல்வீச்சு நடைபெற்றது. இதில் அந்த ரயிலின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து சிதறின. கல்வீச்சில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் மைசூர் மற்றும் கோவைக்கு விரைவாக செல்ல வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை ஏற்கெனவே பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருட்டில் பதுங்கியிருந்த மர்ம நபர், வந்தே பாரத் ரயிலின்மீது சரமாரி கற்களை வீசித் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் வந்தே பாரத் ரயிலின் 2 பெட்டிகளின் பக்கவாட்டு கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சிதறின. அதன் கண்ணாடி சிதறல்கள் பயணிகள் அமரும் இருக்கைகளிலும் சிதறி கிடந்தன.
இதில் பயணிகளின் இருக்கைகளும் சேதமானது. இதுகுறித்து தகவலறிந்ததும் ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் விரைந்து வந்து, சேதமான ரயில்பெட்டிகளை பார்வையிட்டு சோதனை நடத்தினர். இப்புகாரின்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, வந்தே பாரத் ரயில்மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.
The post சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே வந்தே பாரத் ரயில்மீது சரமாரி கல்வீச்சு: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.